`புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்'- முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

`புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்'- முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

`புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும்'' எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சைச் தொடர்ந்தார். அப்போது,  "புதுச்சேரி மீது எனக்குத் தனி பாசம் உண்டு . தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் தனியாக யாரும் பிரித்துப் பார்க்க முடியாது . முன்னாள் முதல்வர் கருணாநிதி கொள்கை உரம் பெற்ற ஊர் இது. புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

புதுச்சேரியில் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால், மக்களுக்காக அந்த ஆட்சி நடைபெறுகிறதா? முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார். உயர்ந்த மனிதர் தான். உயரத்தில்தான். ஆனால் அடி பணிந்து நடக்கிறார். பொம்மை முதலமைச்சர் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை குறை சொல்ல விரும்பவில்லை. அவர் நல்லவர் தான். ஆனா நல்லவர் வல்லவராக இருக்க வேணுமா வேண்டாமா? இல்லையே. ஒரு ஆளுநர் ஆட்டிப்படைக்க கூடிய நிலையிலே புதுவையில் ஒரு ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் வெட்கப்பட வேண்டாமா? அதை கண்டு வெகுண்டெழுந்திருக்க வேண்டாமா? அடங்கி ஒடுங்கி இருக்கக்கூடிய ஒரு ஆட்சி நடக்கிறது என்பது இந்த புதுவை மாநிலத்திற்கு மிகப்பெரிய வெட்கக்கேடு. ஏதாவது ஒரு நன்மை நடந்திருக்கிறதா. இல்லை. புதுச்சேரியில் இருக்கின்ற நமது சட்டமன்ற உறுப்பினர்கள் நமது ஆட்சி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இது தவறில்லை.

ஏற்கெனவே புதுச்சேரியில் நமது ஆட்சி இருந்தது தான். புதுவை மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி உதயமாகும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடக்கவில்லையா? நாராயணசாமி தலைமையிலே நம்மோடு இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெறவில்லையா? நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி. ஆனால் மதவாத ஆட்சி புதுவையில் உருவாகி விடக்கூடாது என்பதில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். புதுவை மாநிலத்தை பொருத்தவரை விரைவில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்றன. புதுவை நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரு இலக்கோடு இப்போதே நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்கள் பணியை தொடங்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் நேரத்திலே யாருடன் கூட்டணி. எப்படி கூட்டணி. எந்த வகையில் அமையப் போகிறது என்பதை அப்போது முடிவெடுக்கப்படும். அது வேற. வெற்றிக்கு இப்போது அச்சாரமாக நமது கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in