
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை (மார்ச் 18) கன்னியாகுமரிக்கு வருவதையொட்டி சுற்றுலாப்பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலம் வந்துள்ளார். நேற்று கொச்சியிலுள்ள ஐ.என்.எஸ் துரோணாச்சாரியா போர்க்கப்பலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை வருகிறார்.
திருவனந்தபுரத்திலிருந்து விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை ஹெலிகாப்டர் தளத்துக்கு வரும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து கார் மூலம் அருகிலுள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்துக்குச் செல்கிறார். பின்னர் தனிப்படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் குடியரசுத் தலைவர், விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்வையிடுகிறார்.
பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் திரவுபதி முர்மு வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு குமரியில் தென்காசி,திருநெல்வேலி,தூத்துக்குடி,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல நாளை சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் டிரோன்கள் பறக்கவும் தடைசெய்யப்பட்டுள்ளது.