ஈபிஎஸ்சை சந்தித்த திரௌபதி முர்மு: ஓபிஎஸ் புறக்கணித்தாரா...புறக்கணிக்கப்பட்டாரா?

ஈபிஎஸ்சை சந்தித்த திரௌபதி முர்மு: ஓபிஎஸ் புறக்கணித்தாரா...புறக்கணிக்கப்பட்டாரா?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுகவினரை சந்தித்து ஆதரவு கோரினார். இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், ஓபிஎஸ் தனியாகச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவுக் கோரி வருகிறார். கூட்டணிக் கட்சியான அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பிளவு பட்டிருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்திப்பார் எனத் தகவல்கள் வெளியாகின.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த சந்திப்பிற்காக ஓபிஎஸ் சார்பாக அவரது உதவியாளர் பொன்னாடை மற்றும் பூங்கொத்து உடன் காத்துக் கொண்டிருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு ரவீந்திரநாத் வந்திருப்பதாகவும், ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நட்சத்திர விடுதியில் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியுடன் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஓபிஎஸ் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், திரௌபதி முர்முவை தனியாகச் சந்திக்க விரும்புவதாக அண்ணாமலையிடம் வலியுறுத்தியதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியாகக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in