பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு: ஜெயிக்கப் போவது முர்முவா- யஷ்வந்த் சின்ஹாவா?

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு: ஜெயிக்கப் போவது முர்முவா- யஷ்வந்த் சின்ஹாவா?

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே, அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை நிறுத்த பாஜக தீவிரமாக முயற்சித்து வந்தது. இதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக தேசிய தலைமை அறிவித்தது.

அதே நேரத்தில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தது. முதலில் சரத்பவார், அதன் பிறகு பரூக் அப்துல்லா, பின்னர் மகாத்மா காந்தியின் பேரன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், இவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்தனர். இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார். வாஜ்பாய் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா பாஜகவில் இருந்து விலகி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முக்கிய பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. பழங்குடியினத்தை சேர்ந்த திரெளபதி முர்மு, கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ம் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநாக பதவி வகித்தவர். ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி கிராமத்தை சேர்ந்த முர்முக்கு, 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். மகன்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயிக்கப் போவது யார் என்பது ஜூலையில் தெரிந்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in