`தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல’- தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!

`தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல’- தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!

`தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. அடுத்து வரும் நாட்களில் மழை உச்சத்தை அடையும் போதும் இப்போதிருப்பது போன்ற பாதுகாப்பற்ற நிலையே தொடர்ந்தால் அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, மாங்காடு பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி(42) என்பவர் இன்று காலை கால் இடறி மழைநீர் வடிகால் பணி நடைபெறும் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். தமிழக அரசு வெள்ளத் தடுப்பு பணிகளில் அலட்சியம் காட்டுவதாகவும், தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சென்னையை அடுத்த மாங்காடு நகரத்தில், பணிகள் முடிக்கப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து லட்சுமிபதி என்ற தனியார் நிறுவன ஊழியர் இன்று காலை உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. தோண்டப்பட்ட மழை நீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படாததால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது பள்ளங்கள் மூடப்பட வேண்டும் எனத் தொடர்ந்து எச்சரித்தும் கூட அலட்சியம் தொடர்வது சரியல்ல.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. அடுத்து வரும் நாட்களில் மழை உச்சத்தை அடையும் போதும் இப்போதிருப்பது போன்ற பாதுகாப்பற்ற நிலையே தொடர்ந்தால் இன்னும் அதிகமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படும் ஆபத்தை அரசு உணர வேண்டும். பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் தடுப்பரண்களை வைப்பது மட்டுமே பாதுகாப்பு அல்ல. உடனடியாக முடிக்க வாய்ப்புள்ள பணிகளை மழையில்லாத நாள்களில் நிறைவு செய்ய வேண்டும். அத்தகைய வாய்ப்பில்லாத மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in