சொந்த கிராமத்தில் கவிதை வாசித்து கண்கலங்கிய ராமதாஸ்!

சொந்த கிராமத்தில் கவிதை வாசித்து கண்கலங்கிய ராமதாஸ்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தனது சொந்த கிராமத்தில் தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி, கிராம மக்கள் மத்தியில் கவிதை வாசித்தார். நெகிழ்ச்சியான அவரது கவிதை கேட்போரை மனமுருகச் செய்தது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது 84 வது பிறந்தநாளை இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் கொண்டாடினார். அப்போது பெற்றோர் சஞ்சிவிராயர்- நவநீதம் உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். ராமதாஸ் மனைவி சரஸ்வதி, மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். அதன்பின் சொந்த கிராமமான கீழ் சிவிரிக்கு புறப்பட்டார். கீழ் சிவிரிக்கு சென்ற ராமதாஸ், தான் வாழ்ந்த வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து, பழைய நினைவுகளில் மூழ்கிக் கண்கலங்கினார். அதன் பின்னர் கிராமத்தில் அமைக்கப்பட்ட மேடையில் கிராம மக்களிடம் உரையாற்றினார். அப்போது ”என்ன தவம் செய்தேனோ இம்மண்ணில் நான் பிறக்க, ஏது தவம் செய்தேனோ இன்று உங்களோடு நான் இருக்க!” எனக் கவிதை ஒன்றையும் வாசித்தார். இதைக் கேட்ட உறவினர்களும் பாமக நிர்வாகிகளும் கண்கலங்கினார்கள்.

திண்டிவனம் அருகே பாமக மாவட்டத் தலைவர் புகழேந்தி தலைமையிலான பாமகவினர் ராமதாஸின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகளை வழங்குகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் பாமக நிர்வாகிகள் மரக்கன்றுகள் வழங்கியும், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தும் ராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். ராமதாஸின் பிறந்தநாளையொட்டி முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், எதிர் கட்சித்தலைவரான பழனிசாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூகவலைத்தளங்களின் வாயிலாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in