பாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது; சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி

எடப்பாடி பழனிசாமி- அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி- அமித் ஷா

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல,  சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக உறுதியாக தெரிவித்துள்ள நிலையில்,  அதிமுக -  பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்து இடம்பெற்று இருப்பவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. பாஜகவுடன் கூட்டணி முறிவு என அதிமுகவின்  அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு பேட்டியளித்த  கிருஷ்ணசாமி, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அதிமுகவை பிரிந்து செல்ல விட மாட்டார்கள் என தெரிவித்திருந்தார். 

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அதிமுகவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், அதிமுகவுக்கும் - தமிழக பாஜக தலைமைக்கும் இடையிலான பிரச்சினை பேசித் தீர்க்கப்படும் எனவும் கிருஷ்ணசாமி கூறினார்.

 கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

இந்நிலையில், பாஜக கூட்டணியில் வரும் காலத்தில் அதிமுக மீண்டும் சேரும் என்ற கருத்து திசைதிருப்பும் முயற்சி எனவும், இனி எந்த நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுகவுடன் பாஜக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.  கூட்டணியில் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை சரிசெய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமருக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டார். அந்த அளவுக்கு அதிமுகவுக்கு பாஜக தேசிய தலைமை முக்கியத்துவம் அளித்த நிலையில், கூட்டணி பிரிவு என்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பிரச்சினையை சரிசெய்ய மேலிட தலைவர்கள் சிலர் முயற்சி செய்து வருவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in