`பேராசிரியர் அன்பழகன் மாளிகை’ என மாறும் டிபிஐ அலுவலகம்: திமுக மா.செ. கூட்டத்தில் முடிவு!

`பேராசிரியர் அன்பழகன் மாளிகை’ என மாறும் டிபிஐ அலுவலகம்: திமுக மா.செ. கூட்டத்தில் முடிவு!

பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் திருவுருவ சிலை நிறுவி, அந்த வளாகம் ‘பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என அழைக்கப்படும் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் கூட்டணியைப் பலப்படுத்துவது குறித்தும், அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பி, உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையே இருக்கும் மோதல்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்க விழாவினையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் கடந்த 19.12.2021 அன்று அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள் உள்ளிட்ட 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் அந்த வளாகத்திற்கு ‘பேராசிரியர் அன்பழகன் மாளிகை’ எனப் பெயர் சூட்டி, அன்பழகன் படைத்த நூல்களையும் நாட்டுடைமையாக்கினார். அவரது நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் இந்த வருடம், 19.12.2022 தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் திருவுருவ சிலை நிறுவி, அந்த வளாகம் ‘பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்’ என அழைக்கப்படும். கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி எனப் பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் விருது வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி திமுக தலைமை சார்பில் டிசம்பர் 15-ம் தேதி தமிழகம் முழுவதும், 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in