எங்களுக்கே சீட் இல்லையா? - கட்சியிலிருந்து விலகிய தெலங்கானா காங்கிரஸ் சீனியர்கள்!

தெலங்கானா காங்கிரஸ்
தெலங்கானா காங்கிரஸ்

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட மறுநாளே, அக்கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் 2 பேர் விலகியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் புதிதாக கட்சியில் சேர்ந்த பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலைக் கண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தெலங்கானா காங்கிரஸ் கட்சி சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவர் ஷேக் அப்துல்லா சோகைல், கொக்கட்பள்ளி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்த வெங்கல் ராவ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 28) காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தங்களது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினர்.

ராகுல் காந்தி ரேவந்த் ரெட்டி
ராகுல் காந்தி ரேவந்த் ரெட்டி

பதவி விலகல் கடிதத்தில் ஷேக் அப்துல்லா சோகைல் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் கட்சிக்காக கடந்த 43 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. முஸ்லீம் தலைமையை நீக்கிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு மாநில தலைவர் பதவி வழங்கியுள்ள காரணத்தால் பதவி விலகுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், வெங்கல் ராவ் தனது விலகல் கடிதத்தில், "கட்சிக்காக 40 ஆண்டுகளாக உழைத்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த புதுமுகங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே கட்சியில் இருந்து விலகுகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட மறுநாளே முக்கியத் தலைவர்கள் 2 பேர் கட்சியில் இருந்து வெளியேறியது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in