இனி சட்டப்பேரவையில் சிரிக்கக் கூடாது... செல்போன்களுக்கும் தடை... அமலுக்கு வரும் புதிய உத்தரவு!

இனி சட்டப்பேரவையில் சிரிக்கக் கூடாது... செல்போன்களுக்கும் தடை... அமலுக்கு வரும் புதிய உத்தரவு!

உத்தரபிரதேச சட்டப் பேரவையில் புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி இனி சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் சிரிக்கக் கூடாது, மொபைல் போன்களை எடுத்துச் செல்லவோ, ஆவணங்களைக் கிழிக்கவோ, சபாநாயகரை நோக்கி முதுகை காட்டி நிற்கவோ கூடாது.

உத்தரப்பிரதேச சட்டமன்றத்தின் 1958ம் ஆண்டின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளை மாற்றி தற்போது 2023ம் ஆண்டின் புதிய விதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. “சட்டமன்றத்தின் புதிய விதிகள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் புதன்கிழமை நடைபெறும், பின்னர் அது நிறைவேற்றப்படும்”என்று உத்தரபிரதேச சட்டமன்ற சபாநாயகர் சதீஷ் மஹானா கூறினார்.

இந்த புதிய விதிகளின்படி, எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எந்த ஆவணத்தையும் கிழிக்க முடியாது. உரையாற்றும் போது கேலரியில் உள்ள யாரையும் சுட்டிக் காட்டக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை நோக்கி முதுகைக் காட்டியபடி நிற்கவோ, உட்காரவோ கூடாது. அதே போல சபைக்கு ஆயுதங்களைக் கொண்டு வரவோ அல்லது காண்பிக்கவோ கூடாது. சட்டசபையில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், எம்.எல்.ஏக்கள் லாபியில் சத்தமாக பேசவோ, சிரிக்கவோ கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் சபாநாயகரின் நாற்காலியை நோக்கி வணங்கி மரியாதை காட்ட வேண்டும் என்றும், சபாநாயகர் அவைக்குள் நுழையும் போதோ, வெளியேறும் போதோ அல்லது தங்கள் இருக்கைகளில் இருந்து எழும்போதோ எம்.எல்.ஏக்கள் முதுகைக் காட்டக்கூடாது என்றும் விதிகள் கூறுகின்றன.

புதிய விதிகளின்படி, சட்டசபையைக் குறைந்தபட்சம் 14 நாட்கள் நடத்த வேண்டும் என்பது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சட்டமன்ற உறுப்பினர்கள் இலக்கியம், கேள்வித்தாள், புத்தகம் அல்லது பத்திரிகைக் கருத்துகளை உள்ளே எடுத்துச் செல்லக் கூடாது. மேலும், அவை நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்படாத குறிப்பு சீட்டுகளை விநியோகிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in