கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் குடுக்காதீங்க... டெல்லிக்கே போய் மன்றாடும் சிதம்பரத்தின் வார்ப்புகள்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதியில் மீண்டும் கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்கக் கூடாது எனக் கோரி முன்னாள் எம்எல்ஏ-க்கள் முன்னாள் எம்பி உள்ளிட்ட 8 பேர் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் பொறுப்பாளர்களை சந்தித்துப் பேசி வருகிறார்கள்.

சிவகங்கை தொகுதியின் சிட்டிங் எம்பி-யான கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என சிவகங்கை காங்கிரஸுக்குள் சிலர் கலகம் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக அண்மையில் கூட்டம் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றினார்கள்.

இந்த நிலையில், இந்த தீர்மான நகலை எடுத்துக் கொண்டு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி-யான சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ-க்களான கே.ஆர்.ராமசாமி (கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாநில தலைவர்) என்.சுந்தரம், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி மாவட்ட பொருளாளர் எஸ்.என்.பழனியப்பன் உள்ளிட்ட 8 பேர் கடந்த ஒரு வார காலமாக டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

கே.ஆர்.ராமசாமி, சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரம், என்.சுந்தரம்
கே.ஆர்.ராமசாமி, சுதர்சன நாச்சியப்பன், கார்த்தி சிதம்பரம், என்.சுந்தரம்

இவர்களில் என்.சுந்தரம் 35 ஆண்டு காலம் ப.சிதம்பரத்துக்கு உதவியாளராகவும் இருந்தவர். கே.ஆர்.ராமசாமி சிதம்பரத்தின் பாசறையில் வளர்ந்தவர். சிதம்பரத்தால் மாவட்ட தலைவராக அமர்த்தப்பட்ட சத்தியமூர்த்தி, கே.எஸ்.அழகிரி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பதற்காக அண்மையில் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர்களையும் காரியக்கமிட்டி உறுப்பினர்களையும் குழுவாகச் சென்று சந்தித்து வரும் இக்குழுவினர், கார்த்திக்கு மீண்டும் ஏன் சீட் கொடுக்கக்கூடாது என்பதை விளக்கி எடுத்துச் சொல்லி வருகின்றனர்.

சத்தியமூர்த்தி
சத்தியமூர்த்தி

இதுகுறித்து நம்மிடம் பேசிய இவர்களில் சிலர், “காங்கிரஸ் கொள்கைக்கு முரணாகவும், மோடிக்கு ஆதரவாகவும் பேசி வரும் கார்த்தியின் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் முக்கிய தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். நேற்றுகூட, ’மோடி பற்றி நான் சொன்ன கருத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்’ என்று எக்ஸ் தளத்தில் எழுதி இருக்கிறார் கார்த்தி. இதையெல்லாம் எப்படி பொறுத்துக்கொள்வது?

நாங்கள் சொல்வதை விரும்பாவிட்டால் இங்குள்ள தலைவர்கள் அதை காதுகொடுத்துக் கேட்கமாட்டார்கள். ஆனால், இதுவரை நாங்கள் சந்தித்த அத்தனை தலைவர்களுமே நாங்கள் சொன்னதை எல்லாம் காதுகொடுத்து கேட்டார்கள். சிலபேர் கமென்டும் செய்தார்கள். சிலபேர், ‘கார்த்தியின் நடவடிக்கைகள் எங்களுக்கும் தெரியும்’ என்று எங்களை முந்திக்கொண்டு சொன்னார்கள்.

சிதம்பரத்தின் பின்னால் சுந்தரம்
சிதம்பரத்தின் பின்னால் சுந்தரம்

சிதம்பரத்துக்கு 35 ஆண்டு காலம் உதவியாளராக இருந்த சுந்தரமே கார்த்திக்கு எதிராக வந்திருக்கிறார் என்றதைக் கேட்டு பல தலைவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். டெல்லியில் மொத்தம் 28 தலைவர்களை சந்தித்து எங்களின் கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். அதில் இதுவரை பாதி பேரை சந்தித்துப் பேசிவிட்டோம். எஞ்சியவர்களையும் சந்தித்துப் பேசி நாங்கள் வந்த வேலையை முடித்துவிட்டுத்தான் சிவகங்கைக்குத் திரும்புவோம்” என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in