இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லையா?- எல்.முருகன் பதில்

இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லையா?- எல்.முருகன் பதில்

இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர், அமித்ஷா மேல் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லையா? என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது. அதே நேரத்தில், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்திருக்கிறது. இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளரிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "மக்களின் அதீத நம்பிக்கை, குஜராத்தில் ஏற்பட்டிருக்கிற வளர்ச்சி, அங்கு நன்றாக இருக்கிற ஆளுமை ஆகியவற்றால் மீண்டும் பாஜகவுக்கு அந்த மக்கள் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இருக்கிறது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்" என்றார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உங்களிடம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் வசம் வந்திருக்கிறது. பாஜகவுக்க சறுக்கல் என்று சொல்லலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த முருகன், அது ஒரு சறுக்கல் என்று சொல்ல முடியாது. ஓட்டு சதவீதம் பார்த்தீர்கள் என்றால் 0.9 சதவீதம் தான் ஓட்டு விகிதம் குறைந்து இருக்கிறது. குஜராத்தில் எப்படி மக்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார்களோ அதேபோல் தான் இமாச்சலப் பிரதேசத்திலும். ஆனால் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்திருக்கிறது. அதேபோல் உத்தரகாண்ட்டிலும் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட் இழந்திருக்கிறது. உத்தரபிரதேசத்தில் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் அரசியல் குழப்பத்திற்கு வித்திட்டார்கள். ஆனால் எதுவும் பழிக்கவில்லை. இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகவுக்கு ஒரு நல்ல வெற்றி தான் கிடைத்திருக்கிறது" என்றார்.

குஜராத்தில் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமர், அமித்ஷா மேல் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த முருகன், "மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தான் நான் சொல்கிறேன், ஓட்டு சதவீதம் 0.9 தான். வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்றுதான். மக்களுடைய தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்" என்றார்.

ஆம் ஆத்மி கட்சி வருகை பற்றி எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் எடுபடவில்லையே. அதனால் அவர்களுடைய வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி டெபாசிட் இழந்து இருக்கிறது. அவர்கள் ஒரு சதவீதம் தான் வாக்கு வாங்கி இருக்கிறார்கள். குஜராத்தில் இறுதி முடிவு வரும்போது அவர்கள் பெற்ற வாக்கு வங்கி எவ்வளவு என்பது தெரியவரும். அதனால் அவர்கள் பெரிய அளவில் வருகிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு வங்கி 11 சதவீதம் குறைந்து இருக்கிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீதம் வாக்கு வங்கி இருந்தது. இன்றைக்கு 42 சதவீதம் தான் வாக்கு வங்கி இருக்கிறது. 11 சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது. அதனால் ஆம் ஆத்மி கட்சி மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இழந்து இருக்கிறது என்பதை இது காட்டுகிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in