‘பாஜகவின் வலையில் சிக்காமல் இருங்கள்’ - கட்சியினருக்கு சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை

‘பாஜகவின் வலையில் சிக்காமல் இருங்கள்’ - கட்சியினருக்கு சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை

பாஜகவின் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களுக்குள் சென்று, உங்களை தொந்தரவு செய்ய பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம் என கட்சியினரை தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் எச்சரித்துள்ளார்

தெலங்கானா பவனில் நடைபெற்ற டிஆர்எஸ் சட்டமன்றக் கட்சி, நாடாளுமன்றக் கட்சி மற்றும் மாநில செயற்குழுவின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ், “முன்கூட்டியே தேர்தலை சந்திக்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டபடி அவை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும். எனவே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஹைதராபாத்தில் இருக்காமல், தேர்தல் நடைபெறும் வரை அந்தந்த தொகுதிகளிலேயே இருக்கவேண்டும். நீங்கள் அந்தந்த தொகுதிகளின் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டும், அவர்களின் தேவைகளை தவறாமல் கவனிக்க வேண்டும்.

வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் டிஆர்எஸ் நிச்சயமாக வெற்றி பெறும். நான் நியமித்த அனைத்து ஆய்வுகளும் டிஆர்எஸ்-க்கு சாதகமான அறிக்கையை அளித்துள்ளது. டிசம்பர் 2018 தேர்தலில், நமது கட்சி 88 சட்டமன்ற இடங்களை வென்றது. இந்த முறை, எண்ணிக்கை 95 ஆக உயரும். தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளோம்.

அனைத்து சிட்டிங் எம்எல்ஏக்களுக்கும் கட்சி சீட்டு வழங்கும், அதனால் அச்சப்பட தேவையில்லை. ஆனால் வெற்றிபெறலாம் என்ற மனநிறைவுடன் நீங்கள் இருக்கக் கூடாது. உங்கள் தொகுதிகளில் உள்ள மக்களின் நம்பிக்கையை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்” என கூறினார்

மேலும், “நமது எம்எல்ஏக்களை வேட்டையாடுவதன் மூலம் ஆளும் கட்சியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நமது கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்தோ அல்லது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ரெய்டுக்கு உத்தரவிடுவோம் என்று மிரட்டி எந்த எல்லைக்கும் செல்வார்கள். கொடுமை என்னவென்றால், என் மகள் கவிதாவுக்கு எதிராக கூட அவர்கள் இந்த தந்திரத்தை பயன்படுத்தினார்கள்

எனவே, நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பாஜகவின் வலையில் சிக்காமல் இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களுக்குள் சென்று, உங்களை தொந்தரவு செய்ய பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டாம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ரெய்டுகளைக் கண்டு பயப்பட வேண்டாம். கட்சி உங்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும். எங்கெல்லாம் சிபிஐ, இடி ரெய்டுகள் நடந்தாலும் கிளர்ச்சி செய்து விரட்டி அடிக்க வேண்டும். அவர்கள் எங்கு சோதனை நடத்தினாலும் தர்ணா மற்றும் போராட்டங்களை நடத்துங்கள்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in