‘பாஜகவின் கொள்கைகளுக்கு இரையாகாதீர்கள்’ - எச்சரிக்கும் தெலங்கானா முதல்வர்

‘பாஜகவின் கொள்கைகளுக்கு இரையாகாதீர்கள்’ - எச்சரிக்கும் தெலங்கானா முதல்வர்

பாஜகவின் கொள்கைகளுக்கு மக்கள் பலியாக வேண்டாம் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய சந்திரசேகர் ராவ், "தெலங்கானாவை மீண்டும் நரிகள் வந்து சாப்பிடாதவாறு பாதுகாக்க வேண்டும். பழைய நிலைக்கு நம் மாநிலம் திரும்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாஜகவின் அரசியல் நலன்களுக்கு பலியாகாதீர்கள். நீண்ட போராட்டத்தில் 14 ஆண்டுகள் சாகும் வரை போராடி இந்த மாநிலத்தை அடைந்தேன். தற்போது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர வேண்டும். தொழில்துறை, ஐ.டி, விவசாயம் ஆகியவை முன்னேற வேண்டும்.

நாங்கள் கொடுப்பது இலவசம் என்று மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். 8 ஆண்டுகளாக பாஜக ஏதாவது நம் மாநிலத்துக்கு நன்மை செய்ததா? மக்கள் இதனை விவாதிக்க வேண்டும். அரசியல் விழிப்புணர்வுள்ள சமுதாயமாக இல்லை என்றால், நாம் கொள்ளையடிக்கப்படுவோம். ஏகப்பட்ட ஆட்சியாளர்களின் கைகளில் நசுக்கப்பட்டோம். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு இறந்தனர். அந்த நாட்கள் மீண்டும் வராமல் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், மத்திய அரசால் யாருக்கும் பலன் இல்லை என தெரிவித்த தெலுங்கானா முதல்வர், “பாஜக கொடியை பறக்கவிட்டால், அவர்கள் வயல்களில் மின்சாரத்துக்கு மீட்டர் போட்டு பெரிய பணக்காரர்களின் வயிற்றை நிரப்புவார்கள். விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாகக் கொடுக்கக்கூடாதா” என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in