'பெண்களை அவமதித்ததால் பாஜக தோற்றது..’

பர்ஷா சிங்
பர்ஷா சிங்

பெண் வேட்பாளரை தனிப்பட்ட வகையில் தாக்கியதும், அவமரியாதை செய்ததுமே, மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக தோற்கக் காரணம் என சாடியுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

ஒடிசா மாநிலம் பதம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் டிச.8 அன்று வெளியாயின. இதில் மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரான பர்ஷா சிங், சுமார் 42 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதீப் புரோஹித்தை தோற்கடித்துள்ளார். பாஜக ஆதரவு அலையும் ஆளும்கட்சிக்கான அதிருப்தி ஓட்டுகளும் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த பாஜக நம்பிக்கையில் மண் விழுந்திருக்கிறது. அதிலும் அரசியலுக்கு புதுமுகமான பர்ஷா சிங், பெரும் வாக்குகள் வித்தியாசத்துடன் பாஜகவை தோற்கடிக்கப்பட்டிருப்பதும் அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பதம்பூர் தொகுதியின் பிஜு ஜனதா தளம் எம்எல்ஏவாக இருந்த பிஜய் ரஞ்சன் சிங் அக்.2 அன்று மரணமடைந்தார். அடுத்து அத்தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில், ரஞ்சன் சிங்கின் மகள் பர்ஷா சிங் அக்கட்சி சார்பாக நிறுத்தப்பட்டார். அரசியலுக்கு புதியவரும் இளம் வயதும் உடைய பர்ஷா சிங்கை பிரச்சார கூட்டங்களில் பாஜகவினர் எள்ளி நகையாடினர்.

முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பர்ஷா சிங்
முதல்வர் நவீன் பட்நாயக் உடன் பர்ஷா சிங்

அவரது அரசியல் அனுபவமின்மை மட்டுமின்றி பெண் என்பதற்காக பர்ஷா அவமரியாதை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பதம்பூர் தொகுதியில் பாஜகவின் வெற்றி எளிதில் சாத்தியமாகும் என்றே கணிப்புகளும் வெளியாகி வந்தன. ஆனால் பர்ஷா சிங்கின் மகத்தான வெற்றி அனைவருக்கும் ஆச்சரியம் தந்திருக்கிறது. பர்ஷாவுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களே பாஜகவுக்கான பெண்களை வாக்குகளை கலைத்தது என இப்போது விமர்சிக்கின்றனர்.

இது தொடர்பாக பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தியில், “நீங்கள்(பாஜக) மத்தியில் ஆள்கிறீர்கள். நாங்கள் மாநிலத்தை ஆள்கிறோம். வாருங்கள் ஒன்றிணைந்து ஒடிசாவின் வளர்ச்சிக்கு உழைப்போம். அதை விடுத்து பெண்களை அவமரியாதை செய்யக் கூடாது. தகப்பனை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருந்தவரை, பெண் என்பதற்காக தனிப்பட்ட வகையில் தாக்கலாமா? அப்படி செய்ததால் மக்கள் தங்கள் தீர்ப்பை இப்படித்தான் எழுதுவார்கள்” என்று பாஜகவினருக்கு அறிவுரை விடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in