என்னை காரணமாக காட்டி வசுந்தரா ராஜேவை தண்டிக்காதீர்கள்... அசோக் கெலாட் வேண்டுகோள்!

என்னை காரணமாக காட்டி வசுந்தரா ராஜேவை தண்டிக்காதீர்கள்... அசோக் கெலாட் வேண்டுகோள்!

என்னை காரணமாக காட்டி வசுந்தரா ராஜேவை தண்டிக்காதீர்கள் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பாஜகவிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன. ராஜஸ்தானில் ஆளும் அரசாக இருக்கும் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்குமிடையே பல்வேறு சலசலப்புகள் இருந்துவருகின்றன.

எதிர்வரும் தேர்தலில் யாரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கேள்வி வழுவாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பா.ஜ.க-விடம், `வசுந்தரா ராஜேவை என்னைக் காரணம்காட்டி தண்டிக்காதீர்கள்!' என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

2020-ம் ஆண்டு ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி நடந்தது என்றும் அதன் பின்னணியில் அமித் ஷா இருந்ததாகவும், எனினும் வசுந்தரா ராஜே சிந்தியா காங்கிரஸ் அரசை அந்தச் சதியிலிருந்து காப்பாற்றியதாகவும் கடந்த மே மாதம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். ஆனால், வசுந்தரா ராஜே அதை உறுதியாக மறுத்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட், ``பாஜகவில் வசுந்தரா ஓரம்கட்டப்படுவது குறித்த கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. அது அவர்களின் உட்கட்சி விவகாரம். ஆனால், என்னைக் காரணம்காட்டி அவருக்குத் தண்டனை வழங்க வேண்டாம் என்று மட்டும் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அப்போது மாநில முதல்வராக இருந்த பைரோன் சிங் செகாவத் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். அப்போது இங்கு அவரது கட்சியினரே அவரது அரசை கவிழ்க்க முயன்றனர். ஆனால், நான் மாநில காங்கிரஸ் தலைவராக 'இது சரியில்லை' என்று அதற்கு எதிப்பு தெரிவித்தேன்.

இதனை நான் அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், ஆளுநர் பாலி ராம் பகத் ஆகியோரிடமும் தெரிவித்தேன். இது குறித்து கைலாஷ் மேக்வாலுக்குத் தெரியும். எனது தலைமையிலான அரசு நெருக்கடியைச் சந்தித்தபோது, அதே போன்ற சூழ்நிலை எனது அரசுக்கும் வந்தபோது, நான் எடுத்த அதே நிலைபாட்டிலேயே அவரும், 'அரசைக் கவிழ்ப்பது மரபல்ல' என்று மறுப்பு தெரிவித்திருந்தார். நான், வசுந்தரா ராஜேவுடன் இணைந்த எம்.எல்.ஏ-க்களை தொடர்ந்து சந்தித்து வந்ததால், கைலாஷ் மேக்வால் போலவே வசுந்தராவும் அதே முடிவினைக் கொண்டிருந்தார் என்று அறிந்துகொண்டேன். இதை யாரிடமும் சொல்லாமல்தான் இருந்தேன். ஆனால் பொதுக்கூட்டம் ஒன்றில் என் வாயிலிருந்து

தவறுதலாக இந்தத் தகவலை வெளியே சொல்லிவிட்டேன். எனவே, என்னைக் காரணம்காட்டி அவரை தண்டிக்க வேண்டாம்" என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in