‘ஆசம் கானை விடுவிக்க அகிலேஷ், முலாயம் முயற்சிக்கவில்லை!’

சமாஜ்வாதியில் சலசலப்பை ஏற்படுத்தும் ஷிவ்பால் சிங்
‘ஆசம் கானை விடுவிக்க அகிலேஷ், முலாயம் முயற்சிக்கவில்லை!’
ஷிவ்பால் சிங் யாதவ்

பிரகதிஷீல் சமாஜ்வாதி லோகியா கட்சியின்(பிஎஸ்எல்பி) தலைவர் ஷிவ்பால் சிங் யாதவ், சிறையில் உள்ள சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஆசம் கானை சமீபத்தில் சந்தித்தார். பின்னர் அதுதொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள் சமாஜ்வாதி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின் சமாஜ்வாதி கட்சிக்கு சிக்கல் உருவாகி உள்ளது. அக்கட்சியின் அகிலேஷ் யாதவின் செயல்பாடுகளைக் கண்டித்து, அவரது சித்தப்பாவும் கூட்டணிக் கட்சி தலைவருமான ஷிவ்பால் சிங் யாதவ் பாஜக பக்கம் சாயத் தொடங்கியுள்ளார். சமாஜ்வாதியின் முஸ்லிம் நிர்வாகிகளும் அகிலேஷ் மீது அதிருப்தி காட்டத் தொடங்கியுள்ளனர். இச்சூழலில், சீதாபூர் சிறையில் இரண்டு வருடங்களாக அடைபட்டு கைதியாகவே போட்டியிட்டு சமாஜ்வாதி எம்எல்ஏ-வாகி உள்ள ஆசம் கானைக் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.22) ஷிவ்பால் சந்தித்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீட்டித்த இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஷிவ்பால் சிங், “ஆசம் கான் ஒரு பெரிய தலைவர். முலாயமும், அகிலேஷும் முயற்சித்திருந்தால் அவரைச் சிறையிலிருந்து விடுவித்திருக்கலாம். அவரது பிரச்சினையை நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சியினர் எழுப்பாததன் மூலம், அவர் சிறையிலிருப்பதையே கட்சி விரும்புவதாகத் தெரிகிறது. ஆசமின் வருத்தத்தை நான் முதல்வர் யோகிஜியிடம் எடுத்துரைப்பேன். நேரம் வரும்போது பாஜக மீது எனது நிலை உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னும் பாஜகவில் இணையும் தம் பாதை சரியாகாத காரணத்தால் ஷிவ்பால் சிங் காத்திருக்கிறார். ஒருவேளை பாஜகவில் சேர முடியாமல் போனால், ஆசமுடன் இணைந்து சமாஜ்வாதியில் பிளவை ஏற்படுத்த ஷிவ்பால் முயல்வதாகவும் கருதப்படுகிறது. இதன்மூலம், உபியில் யாதவர்-முஸ்லிம் வாக்குகளை நம்பி அரசியல் செய்யும் சமாஜ்வாதிக்குத் தேர்தல்களில் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகின்றன. இதற்காகவே பாஜக ஷிவ்பால் சிங்கைத் தூண்டிவிடுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இப்பிரச்சினை குறித்துப் பேசிய ஷிவ்பால், தான் தற்போது சமாஜ்வாதியின் 111 எம்எல்ஏ-க்களில் ஒருவர் எனவும், தன் மீது அதிருப்தி என்றால் கட்சியில் இருந்து தன்னை விலக்கட்டும் எனக் கூறியுள்ளார். சமாஜ்வாதியிலிருந்து விலகி 2019-ல் பிரகதிஷீல் சமாஜ்வாதி (லோகியா) எனும் கட்சியைத் தொடங்கிய ஷிவ்பால் இந்த முறையும் அவராகவே விலக வேண்டும் என்பது அகிலேஷின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய தேர்தலில் சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியில் இணைந்து, ஜஸ்வந்தநகரில் சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்தில் ஷிவ்பால் போட்டியிட்டிருந்தார். அவரை விலக்கினால், யாதவர் சமூகத்தின் எதிர்ப்புகள் வரும் என அகிலேஷ் அஞ்சுவதாகக் கருதப்படுகிறது.

ஆசம் கான்
ஆசம் கான்

சமாஜ்வாதியில் முஸ்லிம் நிர்வாகிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க, இருதினங்களுக்கு முன் கூட்டணி தலைவரான ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, ராம்பூரில் ஆசம் குடும்பத்தினரைச் சந்தித்திருந்தார். இதன் பின்னணியில் அகிலேஷும், ஆசமும் ராஜினாமா செய்திருந்த மக்களவை தொகுதிகளாக ஆசம்கர் மற்றும் ராம்பூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் காரணமானது. தற்போது ஷிவ்பாலின் சந்திப்பால் சமாஜ்வாதியின் சிக்கல் குறைந்தபாடில்லை. உபி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட ஷிவ்பாலின் மகனான ஆதித்யா யாதவுக்கு சமாஜ்வாதியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதனால், தனது மகனின் அரசியல் எதிர்காலத்தைக் கருதி ஷிவ்பால் இந்தப் பிளவு முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தெரிகிறது.

Related Stories

No stories found.