எடப்பாடிக்கு எதிராக சசிகலாவுடன் கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்?

எடப்பாடிக்கு எதிராக சசிகலாவுடன் கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்?

சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது பற்றி நிர்வாகக் குழு கூடி முடிவெடுக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது, அதிமுகவுக்கு உள்ளும் புறமும் பலத்த விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியிருக்கிறது. அத்தோடு, எந்தப் பதவியில் இருந்தாலும் கண்ணியத்துடன் பேசவேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த இரு கருத்துகளையும் ஓ.பன்னீர்செல்வம் பொதுவெளியில் வைத்துச் சொல்லவேண்டியதன் அவசியம் என்ன?

காரணம், சில தினங்களுக்கு முன்னால் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திய வாக்கியங்களும் வார்த்தைகளும்தான். ஆம், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, ‘சூரியனைப் பார்த்து..’ என்று தொடங்கும் பழமொழியை மேற்கோள் காட்டி, அவரைப் பார்த்து எங்களுக்கென்ன பயம் என்று சசிகலாவை நோக்கிக் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

அப்படி எடப்பாடி ஆவேசம் காட்டியதன் பின்னணி என்ன என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்த நிலையில், ஆளுநருடனான சந்திப்பின்போது ஏன் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்ற கேள்வியும் மறுபக்கம் எழுந்தது. குறிப்பாக, 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் பற்றி ஆளுநரிடம் பேசும்போது அதில் பங்கேற்க ஓபிஎஸ் தவிர்த்துவிட்டாரா, அல்லது தவிர்க்கப்பட்டாரா? என்ற கேள்வியும் கூடவே எழுந்தது.

அந்தச் சூழலில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தனக்கே உரித்தான பாணியில் சசிகலா குறித்த கேள்விக்கும் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திய கடும் சொல்லுக்கும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்பதும் ஏற்காமல் போவதும் மக்களின் மனநிலை, மக்களின் முடிவு என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் முதல் கருத்து. தேர்தலுக்கு முன்னால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகச் சொன்ன சசிகலா, மீண்டும் அரசியலுக்கு வருவது ஏன் என்ற கேள்வியை எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக எழுப்பிவருகிறார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற பொருளில் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பதாகவே தெரிகிறது.

அடுத்து, சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது பற்றி உயர்மட்ட நிர்வாகிகள் கூடி, ஆலோசித்து முடிவெடுப்பர் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு நிலைப்பாடு. அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நீதிமன்றம் சொல்லி, தேர்தல் ஆணையமும் சொல்லிவிட்டபிறகு அவரைக் கட்சியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற திட்டவட்டமான நிலையை எடப்பாடி பழனிசாமி எடுத்துவிட்டார். அதைத்தான் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவருகிறார்.

ஆனால் அப்படி சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்த விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி தனியுரிமை காட்டுவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் தான் விரும்பவில்லை என்பதைத்தான் கட்சி நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பர் என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்றே தெரிகிறது. சசிகலாவைச் சேர்ப்பதா, வேண்டாமா என்பது எடப்பாடி பழனிசாமியின் சொந்த முடிவாக இருக்கமுடியாது, மாறாக, தான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் முடிவாகத்தான் இருக்கவேண்டும் என்பதைத்தான் ஓ.பன்னீர்செல்வம் அழுத்தமாக வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது.

சசிகலாவைச் சேர்ப்பதா, வேண்டாமா என்பதைத் தாண்டி அவரை நோக்கி கடும் சொல்லை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தியது விமர்சனத்துக்குள்ளானது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில்தான் “எந்தப் பதவியில் இருந்தாலும் கண்ணியமாகப் பேசவேண்டும்” என்ற ஆலோசனையைக் கொடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கும் எச்சரிக்கை, சசிகலா ஆதரவாளர்களுக்கும் சமிக்ஞை என்று ஒரே கல்லில் 2 இலைகளுக்குக் குறிவைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இப்படி, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு பச்சைக்கொடி காட்டுவது போன்ற வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசியது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்தச் சலசலப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஜெயக்குமாரும், ஒருகாலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக அறியப்பட்ட கே.பி.முனுசாமியும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

குறிப்பாக, சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதில்லை என்று அதிமுகவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வமும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்பதையும், சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நினைவூட்டுவதாகச் சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சே எழவில்லை என்பது கே.பி.முனுசாமியின் கருத்து.

ஆம், கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒழுங்கு நடவடிக்கை குறித்த எச்சரிக்கையை கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜெயக்குமார் நினைவுபடுத்தியிருக்கிறார். உண்மையில், இதேபோன்ற தீர்மானங்கள்தான் சசிகலாவையும் அதிமுகவின் பொதுச்செயலாளராக்கின. ஆனால் அந்தத் தீர்மானம் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி அதிமுகவுக்கு உள்ளிருந்தே எழுகிறது.

தவிரவும், சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று சொல்லி ஓ.பன்னீர்செல்வத்தின் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஏனென்றால், அவர் சசிகலாவைச் சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக, கட்சி நிர்வாகிகள் கூடி முடிவெடுப்போம் என்றுதான் சொல்கிறார் என்பது ஒரு பார்வை.

மற்றொன்று, ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது உடனடியாகச் சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வழங்கக்கூடிய அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உரித்தானது அல்ல, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சரிபாதி அதிகாரம் உண்டு. ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கினால் கட்சி உடைந்துவிடும், இரட்டை இலை முடங்கிவிடும். ஆக, எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தே ஓ.பன்னீர்செல்வம் நகரத் தொடங்கியிருக்கிறார்.

எல்லாம் சரி, சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், ஏன் திடீரென சசிகலாவுக்குச் சாதகமாகப் பேச வேண்டும்? சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது பற்றிய கருத்துகளை முன்வைக்க வேண்டும்? சசிகலா மீதான பழைய விசுவாசம்தான் எல்லாவற்றுக்கும் காரணமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

உண்மையில், அதிமுகவின் தலைமைப் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தாலும், அதிகாரம் என்பது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் கைகளிலேயே இருக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களே. கூட்டணி தொடங்கி வேட்பாளர் தேர்வு வரை எடப்பாடி பழனிசாமியே முடிவெடுத்தார். அதைத் தெரிந்தோ, தெரியாமலோ வழிமொழிந்தார் ஓ.பன்னீர்செல்வம். முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியிலும் எடப்பாடி பழனிசாமியே வென்றார். எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிலும் அவரே வென்றார்.

தேர்தலில் தோற்றபிறகும் எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்துவது, ஓ.பன்னீர்செல்வத்தை யோசனையில் ஆழ்த்தியது. தான் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் அதிகாரம் என்பது எடப்பாடி பழனிசாமியிடமே குவிந்துகிடக்கிறது என்பது வெளிப்படை. அதை எத்தனை நாளுக்கு அனுமதிப்பது என்ற யோசனையின் நீட்சியாகவே, ஒவ்வொரு நகர்வையும் செய்யத் தொடங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

திமுக அரசைப் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும், தனது அறிக்கையே முதன்மையாக வரவேண்டும். மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினாலும் தனது கடிதமே எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை முந்திச்செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நகர்வுக்குப் பின்னாலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது பெயரிலேயே அறிக்கை விடுகிறார்.

முக்கியமாக, கொங்கு மண்டலத்தில் வென்றதன் மூலம் அதிமுகவின் 66 சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றிக்கும் எடப்பாடி பழனிசாமி சொந்தம் கொண்டாடுகிறார் என்ற தோற்றம் உருவாகியிருந்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தனக்கு அருகே திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை வைத்துக்கொண்டு பேசினார். அதன் பொருள் கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் என்றால், தென்மண்டலம் தன்பக்கம் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லவருகிறார் என்றே தெரிகிறது.

ஆக, கட்சிக்குள் தன்னை மீறியோ அல்லது தன்னை ஒதுக்கியோ ஆதிக்கம் செலுத்த எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக முயன்றால், அதை எதிர்கொள்ள சசிகலா ஆதரவு உள்ளிட்ட எந்த நிலைப்பாட்டையும் எடுப்பேன் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் நகர்வுகள் சொல்லும் செய்தி. அப்படியான அதிரடி நகர்வை ஓ.பன்னீர்செல்வம் செய்யும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியின் நகர்வும் அசாதாரணமாகவே இருக்கும். அந்த வகையில் அதிமுகவுக்குள் நிலவும் ஈபிஎஸ் Vs ஓபிஎஸ் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே தோன்றுகிறது!

ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘திராவிட இயக்க வரலாறு’, “தமிழக அரசியல் வரலாறு” முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in