ஆ.ராசாவின் பேச்சை ஆதரிக்கிறதா திமுக?

ஆ.ராசாவின் பேச்சை ஆதரிக்கிறதா திமுக?

மனுதர்மம் குறித்து திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ஆ.ராசா பேசிய விவகாரம் பூதாகரமாகி யிருக்கிறது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, இதற்கு எதிரான போராட்டங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதுபற்றி அலட்டிக்கொள்ளாத திமுக சூழலை அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.

ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்புகள் தவிர ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றொரு பக்கம் திராவிட அமைப்புகள் ராசாவின் பக்கம் நிற்கின்றன. இன்னொரு ஆச்சரியமான விஷயமாக, எல்லா விவகாரத்திலும் திமுகவை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த சர்ச்சையில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு பேசி வருகிறார்.

ஆ.ராசா பேசியது என்ன?

சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆ.ராசா, "நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபசாரியின் மகன்.

இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள்... எத்தனை பேர் விபசாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்" என்றார். அவரின் இந்த பேச்சுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.ராசாவின் பேச்சு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உட்பட திமுக தலைவர்கள் யாரும் ராசாவின் பேச்சுக்கு வெளிப்படையாக ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. ஆனால், பெரும்பாலான திமுக தலைவர்கள் அவரின் பக்கமே நிற்பதாகத் தெரிகிறது. அதனால் தான் அடுத்ததாக இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “என் மீது வழக்குத் தொடர்வதாக சொல்கிறார்கள். அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறேன். அவ்வாறு வழக்குத் தொடர்ந்தால் நீதிமன்றத்தில் உங்கள் மனுஸ்மிருதி சொன்னதையெல்லாம் புட்டுப்புட்டு வைக்கிறேன்” என தெம்பாக தெரிவித்தார். மேலும், “நாங்கள் சனாதன இந்துக்களுக்குத்தான் எதிரானவர்கள்; சாதாரண இந்துக்களுக்கு அல்ல. சாதாரண இந்துக்களின் உரிமைகளுக்காக போராடுவது நாங்கள்தான்” எனவும் கூறினார்.

கோயமுத்தூர் மற்றும் ஆ.ராசாவின் மக்களவைத் தொகுதியான நீலகிரி மாவட்டத்தில் ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிரான போராட்டத்தை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே கோவை பாஜக மாவட்ட செயலாளரும் கைது செய்யப் பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கும் மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆ.ராசாவின் மனுதர்மம், சூத்திரர்கள், இந்துக்கள் குறித்த கருத்துகளை திமுக ஆதரிக்கிறதா என்ற கேள்வியுடன் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம், “அண்ணன் ராசா தனிநபர் அல்ல. அவர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர். ஆனால், இந்துக்கள் குறித்த அவரின் கருத்து திரித்து பேசப்படுவதாகவே நாங்கள் பார்க்கிறோம். இன்றும் சட்டப்படி இந்து சட்டங்களின் பிரிவு 3-ல் பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என்ற விதிகள் உள்ளது. இதில் யார் சூத்திரர் எனும்போது இதுபோன்ற சொற்கள் எல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனை கஸ்டமைஸ் லா, பிராக்டிஸ் லா என்று சொல்கிறார்கள். மக்களின் விடுதலைக்கு, சமத்துவத்துக்கு போராடும் இயக்கமாக இதனையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய தேவை திமுகவுக்கு உள்ளது. சூத்திரர்கள் குறித்து இவ்வாறு மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது என்றுதான் ராசா சொல்கிறார்; அவராக இதைச் சொல்லவில்லை.

இப்போது யார் மனுஸ்மிருதியை பார்க்கிறார்கள் என சிலர் சொல்கிறார்கள். ஆனால், இன்றும் ஆகம விதிப்படி ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகர் ஆகவேண்டும் என நீதிமன்றம் சொல்கிறது. இப்போதும் 99 சதவீத இந்து கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகர்களாக உள்ளனர்; மற்ற இந்துக்களால் அர்ச்சகர் ஆக முடிவதில்லை. இஸ்லாமில் அவர்களில் இறைத்தத்துவத்தை ஏற்று, குரானை படித்தால் யார் வேண்டுமானாலும் இமாமாக ஆகலாம். அதுபோல கிறிஸ்வர்களில் அவர்களின் இறைத்தத்துவத்தை ஏற்று பைபிளை படித்தால் யார் வேண்டுமானாலும் பாதிரியார் ஆகலாம். அப்படி இருக்கையில் இந்துக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தவிர மற்ற 97 சதவீத இந்துக்களால் ஏன் அர்ச்சகராக முடிவதில்லை?

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களின் வேலைவாய்ப்பு, வழிபாட்டு உரிமையைக்கூட கடந்த காலங்களில் மிகவும் போராடித்தான் பெற்றோம். அப்போதெல்லாம் யாரிடம் போராடினோம். இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையேதான் போராடினோம். நாங்கள் அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்றுதான் சொல்கிறோம், பிராமணர்களை தவிர்த்து மற்றவர்கள் ஆக வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், அவர்கள்தான் மற்ற இந்துக்களை அர்ச்சகர் ஆகக்கூடாது எனத் தடுக்கிறார்கள். இதற்காக போராட வேண்டிய கடமை திமுகவுக்கு உள்ளது. இது அவர்களுக்கு எதிரான குரல் அல்ல. நாம் அனைவரும் இந்துக்கள், நாம் அனைவரும் சமம் என்றே நாங்கள் சொல்கிறோம்” என்றார் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

ராசாவைக் கண்டிக்கும் பாஜகவின் போராட்டம் குறித்தும், திமுகவின் நோக்கம் குறித்தும் தொடர்ந்து பேசிய ராஜீவ் காந்தி, “ இந்த விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தப்போவதாக சொல்கிறார். கொங்கு பகுதியில் இந்து மதத்தை சேர்ந்த 50 லட்சம் கவுண்டர் சமூக மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட ஏன் மருதமலை முருகன் கோயிலில் அர்ச்சகராக முடிவதில்லை? இந்துக்களில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தை சாதியின் பெயரால் இன்னும் மலம் அள்ள வைக்கிறார்களே, அது என நியாயம்?

இந்து மதத்தில் உள்ள இத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அதன் வார்த்தைகள் தடிமனாக, கோபமாக உள்ளதென்றால், இதையெல்லாம் பேசித்தான் சரிசெய்யவேண்டும். இந்து மதத்தில் உள்ள பிராமணியம் தன்னை மறுசீராய்வு செய்யத் தயாராக வேண்டும். இல்லை, இன்னும் அப்படியேத்தான் இருப்போம் என்றால், மற்ற 97 சதவீத இந்துக்களின் உரிமையை மீட்க நாங்கள் போராடுவோம்.

எல்லோரும் இந்துக்கள்தான் என்கிறார்கள். ஆனால் இட ஒதுக்கீடு, சிதம்பரம் கோயில் வழிபாட்டு உரிமை என எல்லாவற்றுக்கும் எதிராக சுப்பிரமணியன் சுவாமிதான் வழக்கு தொடுக்கிறார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு எதிராக அவர் ஏன் வழக்கு தொடுக்கிறார் என சிந்திக்க வேண்டும். ஒன்றிய அரசு ஆளும் கட்சி என்பதனால் பாஜக இந்த விவகாரத்தில் பெரும் போராட்டம் செய்வதுபோல காண்பிக்கப்படுகிறது. பாஜகவின் இந்த பொய்ப்பிரச்சாரம் மக்கள் மன்றத்தில் எடுபடாது. அவர்கள் அம்பலப்பட்டு போவார்கள். அவரவர் விரும்பும் கடவுளை வழிபடவும், பரப்பவும் அனைவருக்கும் உரிமை உண்டு. எனவே, இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு நாங்கள் துணை நிற்போம். ஏனென்றால் பெரும்பான்மை இந்துக்கள் வாக்களித்துத்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்கள் நோக்கம் சமத்துவம்தான். எனவே, சமத்துவமின்மைக்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம்.

இப்போதெல்லாம் மனுதர்மம் கடைபிடிக்கப்படுவதில்லை என சிலர் சொல்கிறார்கள். அப்படியென்றால் எப்படி பெரிய கோயில்களில் எல்லாம் ஆகம விதியைக் காரணம் காட்டி குறிப்பிட்ட சமூகம்தானே அர்ச்சகராக உள்ளது. ஆகமம் எங்கிருந்து வந்ததென கேட்டால் மனுஸ்மிருதி, வேதங்கள் என்கிறார்கள். அப்படியானால் இன்னும் மனுஸ்மிருதி ஆதிக்கம் செலுத்துவது உண்மைதானே. இன்னமும் கூட தாங்கள் அர்ச்சகராக வேண்டும் என பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இந்துக்கள் நீதிமன்றம் செல்கிறார்களே... தமிழில் குடமுழுக்கு வேண்டும் என நீதிமன்றங்கள் செல்கிறார்களே. அவற்றை எல்லாம் எதிர்ப்பவர்கள் யார்... எதன் அடிப்படையில் எதிர்க்கிறார்கள்?

தமிழ்க் கடவுள் முருகனின் கோயில்களில் இன்னும் சம்ஸ்கிருத மந்திரங்கள்தானே ஓதப்படுகிறது. தமிழைப் படைத்த சிவனின் ஆலயங்களில் தேவார, திருவாசகம் ஓதுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்து யார்? வெளியில் இருந்து வந்த மதங்களான கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில்கூட தமிழ் வந்துவிட்டதே. இந்துக்களின் கோயில்களில் ஏன் தமிழ் ஒலிப்பதில்லை. இதற்கு எதிராக நிற்பவர்கள் இந்துக்களின் எதிரி” என்றார் அழுத்தமாக

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்களைப் பெரிதும் பாதிக்கும் பிரச்சினைகளின் வீரியத்தைக் குறைத்து பிரச்சினையை திசைதிருப்ப திமுக தரப்பிலிருந்து திட்டமிட்டு இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுகிறார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதை பாஜகவும் உணர்ந்திருந்தாலும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் பிரம்மாஸ்திரமாகவே ராசா விவகாரத்தை கையிலெடுத்து கம்புசுற்றுகிறது. இறுதி வெற்றி யாருக்கென்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in