பாஜகவை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் கட்சி முதல் சவாலாக, தான் சார்ந்த இந்தியா கூட்டணியை காப்பற்ற முயன்றது. அது இயலாது போனது. அடுத்த சவாலாக, கட்சியிலிருந்து விலகும் காங்கிரஸ் தலைவர்களால் தன்னை்யே காப்பாற்றிக் கொள்ள இப்போது போராடி வருகிறது.
தற்போதைய அரசியல் நிலவரப்படி மீண்டும் பாஜக ஆட்சியே தொடர்வதற்கான வாய்ப்புகள் தென்படுவதால், பாஜக எதிர்ப்பு, கட்சிக்கான மீள் கட்டமைப்பு என அக்னி பரீட்சைகளுக்கு காங்கிரஸ் தயாராக வேண்டும். கட்சியை திடமாக்கும் இந்த வாய்ப்புகளை காங்கிரஸ் முறையாக பயன்படுத்திக் கொள்ளுமெனில், 2029-ம் ஆண்டிலாவது பழைய பன்னீர்செல்வமாக அரசியல் களத்தில் காங்கிரஸ் தெம்போடு திரும்ப வாய்ப்பிருக்கிறது.
தடுமாறும் கூட்டணி; தாவும் பெருந்தலைகள்
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே மக்களவைத் தேர்தல் முஸ்தீபுகள், காங்கிரஸ் கட்சியை வெகுவாக பதம் பார்த்துள்ளன. பாஜகவுக்கு எதிரான கூட்டணி என்று ஒரு குடையில் கூடியதை கட்டிக்காக்கும் பொறுப்பை இழந்தது காங்கிரஸ். இதனால் கசந்த கூட்டணிக் கட்சிகள் ஆத்திரத்தை காங்கிரசுக்கு எதிராகவே காட்டி வருகின்றன.
அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் பிராந்திய பெருந்தலைகள் பலரும் பாஜக பக்கம் தாவவோ, அதற்கான போக்கு காட்டியோ காங்கிரசின் மதிப்பைச் சாய்த்து வருகிறார்கள். மூழ்கும் கப்பலிலிருந்து வெளியேறு எலிகளாக காங்கிரஸ் தலைவர்களை பாவித்து அவர்களுக்கு பாஜக அடைக்கலம் தருகிறது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறி என்றாலும், அந்த பெருந்தலைகளை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் தொடர்ந்து போராடி வருகின்றன.
இப்படி கூட்டணியையும், கட்சியையும் கட்டிக்காக்கத் தடுமாறும் காங்கிரஸ், தேர்தலுக்கு பின்னரேனும் மீண்டெழுமா என்பதும் மில்லர் டாலர் கேள்வியாக நீடிக்கிறது. அந்தளவுக்கு, அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய இந்தத் தேர்தலில் 40 சொச்சத் தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்காது என இந்தியா கூட்டணி கட்சிகளே காங்கிரசை வசைபாடி வருகின்றன.
காங்கிரஸ் சுதாரிக்க வேண்டிய நேரமிது. தேர்தல் வெற்றிகளைக் காட்டிலும் கட்சியை மீள்கட்டமைப்பதே அதன் முன்னுள்ள பிரதான சவால். பழம் தலைவர்களின் கட்சியாக இருப்பதும், தொண்டர்களைவிட தலைவர்களே அதிகம் என்பதுபோல தோற்றமளிப்பதும், வாக்காளர்கள் மத்தியில் ஒரு தேசிய கட்சியாக வரவேற்பிழந்ததுமாக... கட்சியின் சுயபரிசோதனைக்கான தேவைகளை சுட்டிக்காட்டுகின்றன.
சாம்பலில் இருந்து மீளுமா?
கடந்த 10 ஆண்டுகளின் தேர்தல் புள்ளி விவரங்கள் சொல்வது, காங்கிரஸ் கட்சிக்கு கசப்பானதாக இருக்கும். 2 மக்களவைத் தேர்தல்கள் மட்டுமல்ல... மாநிலங்களில் நடைபெற்ற 51 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 40-ல் காங்கிரஸ் தோல்வி கண்டிருக்கிறது. இந்தியா என்றால் காங்கிரஸ்; காங்கிரஸ் என்றால் இந்தியா என்ற நிலைமை மாறி, இதற்கு முன்னரும் காங்கிரஸ் கட்சி பலமுறை மோசமான வீழ்ச்சிகளை கண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் முதல் வீழ்ச்சி 1967-ல் தமிழ்நாட்டில் இருந்தே தொடங்கியது. 1977-ல் அது மேற்குவங்கத்தில் வேறாக எதிரொலித்தது. 1990-களில் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா என படிப்படியாக இந்தியாவின் பிராந்தியங்கள் காங்கிரஸ் கையைவிட்டு நழுவ ஆரம்பித்தன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிரிகள் எப்போதும் வெளியில் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக தொடங்கப்பட்டபோதே, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ரெண்டுபட்டே இருந்தனர். கோகலே போன்றவர்கள் காங்கிரசை பெரும்பான்மை இந்துவாதத்துக்கு இழுத்துச் செல்லவே முயன்றனர். அவரது கருத்தியலை எதிரொலித்தவர்களே பின்னர் ஜன சங்கத்துக்கு காரணமாகி, இன்று காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுத முயற்சிக்கிறார்கள்.
இது தவிர காங்கிரஸ் கருத்தியலுடன் ஒத்திசைந்து பயணிக்கும் கட்சியின் பிராந்திய தலைவர்கள் பல தருணங்களில் உடைத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார்கள். அப்படியான முன்னாள் காங்கிரஸாரின் வரலாறு நீளமானது. ஆனால், அந்த சலசலப்புகளில் இருந்தும் விரைவில் காங்கிரஸ் மீண்டெழுந் திருக்கிறது. தற்போதும் அதற்கான வாய்ப்புக்கு காங்கிரஸ் காத்திருக்கிறது.
இவற்றுக்கு அப்பால் அனைவருக்குமான கட்சியாக இருப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது மிகவும் கடினமாகிவிட்டது. பட்டியலின வாக்குகளை பிஎஸ்பி கட்சிக்கும், ஓபிசி வாக்குகளை எஸ்பி மற்றும் ஆர்ஜேடிக்கும், இந்து தேசியவாத வாக்குகளை பாஜகவுக்கும் காங்கிரஸ் பறிகொடுத்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் இஸ்லாமியர் வாக்குகளை, எஸ்பி, ஆர்ஜேடி மற்றும் இஸ்லாமியரை முன்னிறுத்தும் பிராந்திய கட்சிகள் பங்கு போட்டுக்கொண்டன.
காங்கிரஸ் கட்சியின் தேவை முடிந்ததா?
தேசம் சுதந்திரம் அடைந்ததுமே, விடுதலை வேள்விக்கு என உருவான கட்சியை தேசத்தின் சேவைக்காக மாற்ற வேண்டியதன் அவசியத்தை காந்தி வலியுறுத்திவிட்டே மறைந்தார். அதனை முறையாக செவிகொடாததில், காலத்துக்கும் காங்கிரஸ் அடிவாங்கி வருகிறது. அதிலும் கடைசியாக 2004-2014 இடையே மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் வெகுவாக தேய்ந்தது.
சூப்பர் பிரதமராக மறைமுகமாக சோனியா காந்தி ஆட்சி செய்ய துடித்தது, ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் தலைவிரித்தாட வழி செய்தது. சிறந்த நிர்வாகியும், பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் காலத்தில் அவரது வசீகரத் தலைமைக்கு வாய்ப்பே தராது, சோனியா காந்தியின் துதிபாடிகள் ஆட்சி மற்றும் கட்சியை அலைக்கழித்தனர்.
ஆட்சி அளவிலேயும் பெரும்பான்மை கிட்டவில்லை என கூட்டணி கட்சிகளை அரவணைத்ததில், அவர்களின் ஊழல்கள் தனியாக உயர்ந்தன. தாமதமாக சுதாரித்த போதும் காங்கிரஸ் கட்சி மீதான ஆறாத களங்கமாக இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இன்றளவும் நீடிக்கின்றன.
மாற்றம் கோரிய மக்கள் மத்தியில், வளர்ச்சியின் நாயகனாக அறிமுகமான மோடியை கொண்டாட வைத்தது. மோடி தலைமையிலான பாஜகவும் ஊழல் ஒழிப்பு என்பதையே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான முழக்கமாக கொண்டு, விஸ்வரூபமெடுக்க வாய்ப்பானது. பிற்பாடான தனது ஆட்சியில் ஊழல் புகார்களுக்கு பாஜகவும் தப்பவில்லை என்ற போதும், இன்று வரை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாக ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது.
தற்போதைக்கு இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா என 3 மாநிலங்களில் நேரடி ஆட்சியும், ஜார்க்கண்ட், தமிழ்நாடு என இரண்டே மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவுடனான ஆட்சியுமாக காங்கிரஸ் தேய்ந்து போயிருக்கிறது. எனினும், பாஜக வென்ற பல மாநிலங்களில் ஒதுக்க முடியாத வாக்கு வங்கியை காங்கிரஸ் தக்க வைத்திருப்பது, காங்கிரசாருக்கு நம்பிக்கை கீற்றாக காத்திருக்கிறது.
காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை இழுத்தும், மீண்டும் எழவிடாது தடுத்துமாக பாஜக சதிராடி வருகிறது. எனினும், காங்கிரசின் நீண்ட அரசியல் வரலாற்றுடன் ஒப்பிடும்போது பாஜகவுடனான அதன் அரசியல் போராட்டம் ஒப்பீட்டளவில் சிறுத்துப் போகிறது.
பாஜக, ஆர்எஸ்எஸ் என நேரடி எதிரிகளுடன் காங்கிரஸ் தொடர்ந்து வெளிப்படையாக மோதி வந்தாலும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என இயங்கும் மிகப்பெரும் கார்ப்பரேட் லாபியை உடைப்பது சாதாரணமல்ல. திரைக்கு பின்னிருந்து இயங்கும், பெரும் நிதி மற்றும் அதிகாரத்தை ஏவ உதவும் இந்த கார்ப்பரேட் சக்திகள், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அச்சத்தை கைவிட்டால் மட்டுமே, பாஜகவை காங்கிரஸால் வீழ்த்த முடியும்.
இளைஞர்கள் இளம் வாக்காளர்கள் மத்தியில் முதியோர்களின் கட்சியாகவே காங்கிரஸ் பார்க்கப்படுகிறது. மாநிலங்கள் தோறும் பெருந்தலைகளை ஓரம்கட்டி இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியின் உடனடித் தேவைகளாகின்றன.
இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் வரவேற்பு இழப்பது ஆரோக்கியமானது அல்ல. அங்கே வியாபித்திருக்கும் பாஜகவின் ஆக்டோபஸ் கால்களை அகற்றவும் காங்கிரஸ் வெகுவாக போராட வேண்டியிருக்கும்.
பாஜக சளைக்காது மேற்கொள்ளும் சமூக ஊடக சித்தரிப்புகள், மக்களுக்கு உணர்ச்சியூட்டி துருவப்படுத்துவது, மிகைப்படுத்திய சாதனைப் பட்டியல்கள், குறைகளை மூடி மறைக்கும் வேகம் மற்றும் திசைதிருப்பல் என்ற சாமர்த்தியமான கலவையில், அவற்றின் முன்னோடியான காங்கிரஸ் கட்சியையே பாஜக திணறடித்து வருகிறது.
தேர்தல் களத்தில் பாஜக அடித்தாடும் ஆக்ரோஷமான பிரச்சார வேகமும் காங்கிரஸ் தரப்பில் இன்னும் வாய்க்கவில்லை. ஆர்எஸ்எஸ் பின்னணியில் கட்சியினரை இரக்கமின்றி உச்சத்தில் அமர்த்தியும் நீக்கியும் பாஜக அழகு பார்க்கிறது. மாறாக காங்கிரஸ் கட்சியின் மிதமிஞ்சிய ஜனநாயகமும் காங்கிரசின் சீரழிவுக்கு காரணமாகி இருக்கின்றன.
ராகுல் தேறுவாரா?
தலைமையில் ‘காந்திகள்’ வீற்றிருக்கும்வரை காங்கிரஸ் கட்சிக்கு விமோசனமில்லை என்பதும் ஒரு சாடலாக முன்வைக்கப் படுகிறது. வாக்காளர்கள் மத்தியில் வாரிசு அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இனி வரவேற்பில்லை என்றும் அதற்கான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், பாஜக உட்பட இந்தியாவின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை சார்ந்தே இயங்குகின்றன. புள்ளிவிவரங்களும் அதையே காட்டுகின்றன.
16-வது மக்களவையின் 543 உறுப்பினர்களில் 114 பேர் வாரிசு அரசியலில் வந்தவர்கள். இதுவே இப்போதைய 17-வது மக்களவையில் அவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர்கள் வாரிசு அரசியலில் வந்தவர்கள். திமுக, சிவசேனா, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், சமாஜ்வாடி என இந்தியாவின் பல கட்சிகளும் வாரிசு அரசியல் தலைமையிலேயே தொடர்ந்து இயங்கி வருகின்றன. இன்னும் சில கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன.
எனவே ராகுல் காந்தியின் அரசியல் வசீகரமும், ஜோடோ யாத்திரைக்கு பிந்தைய அவரது அனுபவமும் காங்கிரஸ் கட்சிக்கு சகாயம் செய்யவே காத்திருக்கின்றன. ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக காங்கிரசை ராகுல் காந்தி முதலில் கட்டமைக்கட்டும். அதன் பின்னர் பாஜகவுடன் மோதி தங்கள் இருப்பை தீர்மானிக்கட்டும். ஆளும் கட்சி அசுர பலத்தில் அரியணையேறுவதில் ஆதாயங்களுக்கு இணையாக ஆபத்தும் காத்திருக்கிறது. வலிமையான எதிர்க்கட்சி இயங்குவதன் மூலமே அந்த அபாயத்தை நீர்க்கவும் நாட்டுக்கு நலம் செய்யவும் முடியும்!