தமிழகத்தில் தழைக்கத் தொடங்கிவிட்டதா தாமரை?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உணர்த்தும் பாடம் என்ன?
தமிழகத்தில் தழைக்கத் தொடங்கிவிட்டதா தாமரை?
B_VELANKANNI RAJ

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது. தமிழகத்தில் காலூன்ற பகீரத பிரயத்தனத்தை அக்கட்சி செய்துவரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாஜகவுக்கு அதற்கான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறதா?

அண்ணாமலை
அண்ணாமலைB_VELANKANNI RAJ

தமிழகத்தில் பாஜக கடைசியாகத் தனித்து போட்டியிட்டது 2016 சட்டப்பேரவைத் தேர்தலில்தான். அப்போது பெற்ற வாக்கு 2.86 சதவீதம். 2019 மக்களவை, 2021 சட்டப்பேரவை என இரு பொதுத்தேர்தல்களில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் பயணித்ததால், பாஜகவின் உண்மையான ஓட்டு வங்கியை அறிய முடியாமல் போனது. ஆனால், அண்மையில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அதற்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.

திமுகவின் கோட்டையிலும்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டுகளுக்கான தேர்தலில் சுமார் 5,480 வார்டுகளில் போட்டியிட்டது. மாநகராட்சி வார்டுகளில் முழுமையாகப் போட்டியிட்ட அக்கட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் களமிறங்கியது. அதில், மாநகராட்சிகளில் 22 வார்டுகளில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதேபோல நகராட்சிகளில் 56 வார்டுகள், பேரூராட்சிகளில் 230 வார்டுகள் என ஒட்டு மொத்தமாக 308 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. கடந்த காலங்களில் கன்னியாகுமரியில் தனியாக நின்று பாஜக கவனித்தக்க வெற்றிகளைக் குவித்திருக்கிறது. ஆனால், இந்த முறை மதுரை, சென்னை மாநகராட்சிகளில் தனித்து நின்று பாஜக தலா ஓரிடத்தில் வென்றிருப்பது வியப்பில் ஆழ்த்தவும் செய்திருக்கிறது.

உமா ஆனந்தன்
உமா ஆனந்தன்PICHUMANI K

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வாக்குப்பதிவு இன்னும் மோசம். அப்படிக் குறைவாக பதிவான வாக்குப்பதிவில் மாநகராட்சி பகுதிகளில் 7.17 சதவீத வாக்குகளையும், நகராட்சிகளில் 3.31 சதவீத வாக்குகளையும், பேரூராட்சிகளில் 4.30 சதவீத வாக்குகளையும் பாஜக பெற்றிருப்பது அக்கட்சியின் கிராஃப் மேல் நோக்கி நகரத் தொடங்கியிருப்பதையே காட்டுகிறது.

2011 உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மாநகராட்சிப் பகுதிகளில் 0.49 சதவீத இடங்களில் வென்றிருந்தது. நகராட்சிப் பகுதிகளில் 1 சதவீத இடங்களிலும், பேரூராட்சிப் பகுதிகளில் 2.23 சதவீத இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிப் பகுதிகளில் 1.60 சதவீத இடங்களில் பாஜக வென்றிருக்கிறது. நகராட்சிப் பகுதிகளில் 1.46 சதவீத இடங்களையும், பேரூராட்சிப் பகுதிகளில் 3.02 சதவீத இடங்களையும் அக்கட்சி வென்றிருக்கிறது.

நாதகவை முந்திய பாஜக

2011-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதுபோலவே பாஜகவின் வெற்றி விகிதமும் அதிகரித்திருக்கிறது. தேர்தலைப் பொறுத்தவரை வாங்கும் வாக்கு விகிதங்கள், இடங்களின் வெற்றியாக மாற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வாங்கிய வாக்கு என்பது பெருமையடித்துக்கொள்ள மட்டுமே உதவும். உதாரணமாக, சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 6.83 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது நாம் தமிழர். சுமார் 7 சதவீத வாக்குகளைப் பெற்றும் அக்கட்சி, வாக்கு வீதத்தை தொகுதியின் வெற்றியாக மாற்ற முடியவில்லை.

R Senthil Kumar

ஆனால், இப்போது தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் பாஜக வாக்கு சதவீதத்தை அதிகமாகப் பெற்றுள்ளது. அதை சற்று பரவலாக வார்டுகளின் வெற்றியாகவும் மாற்றியிருக்கிறது. இதுபோன்ற காரணங்களை வைத்துத்தான் பாஜக தலைவர்கள், “தமிழகத்தில் நாங்கள்தான் மூன்றாவது மிகப் பெரிய கட்சி” என்று பேசி வருகிறார்கள். இதை காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஏற்க மறுக்கின்றன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிடாத காரணத்தால், அக்கட்சிகளின் தனிப்பட்ட வாக்குவங்கியை அறிய முடியவில்லை.

மேலும், குறைவான இடங்களில் போட்டியிட்டு திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளில் மற்ற கட்சிகளின் வாக்குகளும் கலந்திருக்கும். எனவேதான், மூன்றாவது பெரிய கட்சி என்று காங்கிரஸின் பேச்சு எடுபடாமல் போகிறது. மூன்றாவது பெரிய கட்சி எது என்பதில் இப்போது பாஜகவோடு காங்கிரஸ் மல்லுக்கட்டுவதைப் போல, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு நாம் தமிழர் கட்சியுடன் காங்கிரஸ் மல்லுக்கட்டியதை நினைவுகூரலாம்.

திமுக Vs பாஜக

கடந்த காலங்களில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாஜக தனித்து போட்டியிட்டபோது 3 சதவீத வாக்குகளைக்கூட தமிழகத்தில் பெற்றதில்லை. ஆனால், இப்போது அக்கட்சி அதையெல்லாம் தாண்டி வாக்குகளைப் பெற்றிருக்கிறது. என்னதான் இந்தியாவை ஆளும் கட்சியாகவும், வட இந்தியாவிலும், அண்டை மாநிலமான கர்நாடகத்திலும் கிளை பரப்பி நின்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை பத்தோடு பதினொன்றாகவே பார்க்கப்பட்டது பாஜக. ஆனால், அண்மை காலமாக தமிழகத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை பாஜகவினரும் அதன் ஆதரவாளர்களும் உருவாக்கினார்கள். திமுக Vs அதிமுக என்ற நிலை தமிழகத்தில் பல தசாப்தங்களாக இருந்தாலும் சமூக ஊடங்களில் திமுக Vs பாஜக என்ற நிலையைக் காண முடிகிறது. மேலும், பொதுவெளியிலும் பாஜகவுக்கான ஆதரவு கோஷங்கள் முன்பைவிட அதிகரித்துள்ளன. திமுக அரசை விமர்சிப்பதில் அதிமுகவைவிட பாஜக வேகமாக செயல்படவும் செய்கிறது.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

வேரூன்றுவது உண்மைதான்!

பாஜகவின் இதுபோன்ற உத்திகள் அக்கட்சி தமிழகத்தில் வளர உதவியிருக்கிறதா? அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “இது பாஜகவுக்குக் கண்டிப்பாக வளர்ச்சிதான். தமிழகத்தில் இந்து வாக்கு வங்கியின் ஆரம்பமாக இதைப் பார்க்கலாம். தற்போது 5 சதவீத வாக்கு என்ற நிலைக்கு பாஜக வந்திருக்கிறது. பாஜக தனித்து போட்டியிட்டால் கிறிஸ்தவர்கள் அதிமுக பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் பாஜக ஒன்றரை சதவீத வாக்கு மட்டுமே பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால், இப்போது செந்தில்பாலாஜி Vs எடப்பாடி பழனிசாமி என்ற நிலைக்கு அவர் இறங்கிவிட்டார்.

இந்தத் தேர்தல் மூலம் 2024 மக்களவைத் தேர்தலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கேட்டு வாங்கி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நினைக்கும். பாஜக பெறும் இந்த வாக்குகள் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் பாஜக தனித்து போட்டியிட்டதன் மூலம் அக்கட்சியும் அதிமுக வாக்குகளைத்தான் பிரித்திருக்கிறது. திமுகவின் வாக்குகளைப் பிரிக்க முடியவில்லை. ஆனாலும், பாஜக தமிழகத்தில் வேரூன்ற தொடங்கியிருக்கிறது” என்றார் ரவீந்திரன் துரைசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிJOTHI RAMALINGAM B

வட இந்தியாவில் எதிர் துருவ அரசியல் என்ற பாஜகவின் வியூகங்கள் மேற்கு உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு உதவியிருக்கிறது. அதேபோன்ற பாணியைத்தான் திமுகவுக்கு எதிராக பாஜக இன்று தமிழகத்தில் கையாண்டு வருகிறது. அதன் மூலம் தமிழகத்திலும் அது வேலை செய்யத் தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் பாஜகவின் வாக்குவங்கி சீராகப் பரவாவிட்டாலும், அக்கட்சியின் வாக்குவங்கி கொஞ்சமாக உயர தொடங்கியிருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. குறிப்பாக, திமுகவின் கோட்டையான சென்னையில் சுமார் 8 சதவீத வாக்குகளையும், சுமார் 20 வார்டுகளில் அதிமுகவை ‘ஓவர்டேக்’ செய்து இரண்டாம் இடத்தையும் பிடித்திருப்பதே உதாரணம். மேலும், தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற திராவிட கட்சிகள் முனைவதைப் போல பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற பாஜகவும் தொடர்ந்து முயன்று வருகிறது. இனி திமுகவுக்கு எதிராக பாஜகவின் வியூகங்கள் இன்னும் வேகம் பிடிக்கலாம்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

பாஜகவைத் தவிர்க்க முடியாது!

இத்தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் குறித்து அக்கட்சியின் எண்ணவோட்டம் என்ன? தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நம்மிடம் பேசினார். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் தமிழகத்தில் பாஜகவுக்கான வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மாநகராட்சியைத் தவிர்த்து மற்றப் பகுதிகளில் நேரமின்மை, போட்டியிட முன்வராமல் போனது போன்ற காரணங்களால் 50 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் நாங்கள் போட்டியிட்டோம். இங்கும் பாஜகவுக்கான வாக்காளர்கள் அதிகம் இருந்திருப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனெனில், மாநிலம் முழுவதும் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் முடிவுகள் அமையும். எனவே, வரக்கூடிய காலங்களில் பாஜகவின் வாக்குவங்கி இன்னும் அதிகரிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பாஜகவைப் பொறுத்தவரை இந்து ஓட்டு வங்கி என்ற விஷயத்தைச் சொல்லியதும் இல்லை, அதை ஆதரித்ததும் இல்லை. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற மதரீதியாக செயல்படுவது திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள்தான். இவர்கள்தான் மதரீதியிலான வாக்குவங்கியை உருவாக்குகிறார்கள். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை, கன்னியாகுமரியிலிருந்து நீலகிரி வரை எங்களுடைய பிரதிநிதிகள் வந்திருக்கிறார்கள். இதன்மூலம் தங்களுக்கு எதிராக பாஜக இருப்பதை திமுக இப்போது உணர்ந்திருக்கிறது. வருங்காலத்தில் பாஜகவை எதிர்த்துதான் இங்கு அரசியல் நடக்கும்” என்றார் நாராயணன் திருப்பதி.

தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சிகள் அலட்டிக்கொள்ளாததைப் போல உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளையும் அரசியல் கட்சிகள் பெரிய அளவில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், கடந்த காலங்களில் தமிழகத்தில் தேர்தல் அரசியலில் பகடிக்கு உள்ளான பாஜக இப்போது பெற்றுள்ள வாக்குகள், தமிழகத்தில் விவாதமாக மாறியிருப்பதே அக்கட்சிக்கு ஒரு நேர்மறையான விஷயம்தான். இதற்காகத்தானே பாஜக இத்தனை நாளாகக் காத்திருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in