பிஹாரில் நிகழ்கிறதா மீண்டும் ஓர் அரசியல் மாற்றம்?

பிஹாரில் நிகழ்கிறதா மீண்டும் ஓர் அரசியல் மாற்றம்?
பிஹார் முதல்வர் நிதீஷ் குமார்

பிஹார் மாநில அரசியல் அணியில் மாற்றம் வருமா, ஆளும் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி), லோக் ஜனதா தளம், விகாஷ் ஷீல் இன்சான் ஆகிய கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைக்குமா என்றெல்லாம் அரசியல் பார்வையாளர்கள் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பிஹார் எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தலைநகர்பாட்னாவில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.22) ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரும் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானும் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வரும் தேஜஸ்வியின் தாயாருமான ராப்ரி தேவியின் இல்லத்தில் இந்த விருந்து நடந்தது. இது வெறும் சமூக நிகழ்ச்சியல்ல அரசியல் அணி மாற்றத்துக்கான அடையாளமே என்றே பலராலும் கணிக்கப்படுகிறது. இதில் அரசியல் ஏதுமில்லை என நிதீஷ் குமார் உறுதியாகத் தெரிவித்துவிட்ட பிறகும் ஊகங்கள் தொடர்கின்றன.

அரசியல் கணக்குகள்

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் சிராக் பாஸ்வான் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தேசிய அளவில் விலகாமலேயே, பிஹாரில் மட்டும் அந்தக் கூட்டணிக்கு எதிராகப் போட்டியிட்டார். அவருடைய எதிர்ப்போட்டியின் காரணமாக ஐக்கிய ஜனதா தளம்தான் அதிக தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. அப்போது சிராக் பாஸ்வானின் செயலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மறைமுக ஆசிகள் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிட்டாத போதிலும், நிதீஷின் தலைமையில்தான் மீண்டும் ஆட்சி என்று தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி அவரே முதலமைச்சராகத் தொடர்வார் என்று பாஜக தலைமை அறிவித்தது. இதற்கு முக்கியக் காரணம் நெடுநாள் தோழமைக் கட்சித் தலைவரும் தேசிய அளவில் மதச்சார்பற்ற தலைவராக இன்றளவும் மதிக்கப்படும் நிதீஷ் குமாரை இழந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான். அது மட்டுமல்ல நிதீஷ் குமார் அளவுக்கு நிர்வாக அனுபவமும் நேர்மையும் மக்கள் செல்வாக்கும் உள்ள தலைவர் பாஜகவில் மாநிலத்தில் யாரும் இல்லை.

சுஷீல் குமார் மோடி
சுஷீல் குமார் மோடி

நிதீஷ் குமாரின் நெருங்கிய நண்பரும் துணை முதலமைச்சராகவே நிழல் போலவே தொடர்ந்தவருமான பாஜக தலைவர் சுஷீல் குமார் மோடி, பிஹார் அரசில் பதவி வகிக்கும்வரை நிதீஷ் குமாரை மிஞ்சி கட்சிக்குள் ஒரு தலைவர் உருவாவது கடினம் என்று மாநில பாஜகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, அவரை களம் இறக்காமல் மாநிலங்களவைக்கு அனுப்பிவைத்தது கட்சியின் தேசியத் தலைமை. அவருடைய நிர்வாகத் திறமையை மத்திய அமைச்சரவையில் சேர்த்துப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால், அவரை ஓரங்கட்டிவிட்டார்கள். குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்ட சுஷீல் குமார் மோடி பிறந்து வளர்ந்ததெல்லாம் பிஹாரில்தான் என்பதால் பிஹாரியாகவே தன்னைக் கருதுகிறார். ஆனால் அவருடைய கட்சிக்காரர்களே அவரை குஜராத்தியாக (வெளியாளாக) பார்க்கின்றனர்.

தள்ளாடும் பூரண மதுவிலக்கு

தன்னுடைய கொள்கைகளுக்கு ஏற்ற தோழமை மிக்க பாஜக தலைவர் இல்லாமல் மாநில அமைச்சரவைக் கூட்டங்களில் இடையூறுகளைச் சந்திக்கிறார் முதல்வர் நிதீஷ் குமார். அவருடைய பூரண மதுவிலக்குக் கொள்கையை பாஜக அமைச்சர்களும் மாநிலத் தலைவர்களும் சட்டப் பேரவை உறுப்பினர்களும் விரும்பவில்லை. கேலியும் கிண்டலும் செய்கின்றனர். காரிய சாத்தியமில்லாத இதைக் கைவிடுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். குடிப்பவர்களைக் கைதுசெய்ய மாநில அரசு இயற்றிய சட்டம் நீதிமன்றங்களுக்குப் பணிச்சுமையை அதிகப்படுத்தின. குடியும் குறையவில்லை. கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்தன. மக்களிடையே பெருத்த அதிருப்தியும் எழுந்திருக்கிறது. பழங்குடிகள் பாரம்பரியமாக விருந்துகளில் காய்ச்சிக் குடிக்கும் உள்ளூர் சரக்கையும் தடை செய்திருப்பது விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

அதே வேளையில் சமீப காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பாஜகவினர் எடுத்துவரும் நடவடிக்கைகளை நிதீஷ் வெளிப்படையாகவே கண்டித்து வருகிறார். கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் புல்டோசர்களால் இடித்துத் தள்ளுவதை அவர் விரும்பவில்லை. பிஹாரில் புல்டோசர்களுக்கு வேறு வேலை இல்லை என்று அழுத்தம் திருத்தமாகவே சொல்லிவிட்டார். பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை மத்திய அரசு இன்னமும் ஏற்கவில்லை. மாநில வளர்ச்சிக்கு அவர் வகுத்துள்ள திட்டங்களுக்கு போதிய நிதியுதவிகளும் வழங்கப்படுவதில்லை. இவையெல்லாம் நிதீஷை உறுத்திக்கொண்டே இருக்கின்றன.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

இளமை முதலே நட்பு

சோஷலிச இயக்கத்தில் கல்லூரிப் பருவத்திலிருந்தே ஈடுபட்ட லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார், சுஷீல் குமார் மோடி மூவரும் இளவயது நண்பர்கள். லோகியாவின் ஆதரவாளர்கள். சமூக நீதி, மண்டல் இயக்கம் ஆகியவற்றின் தளகர்த்தர்கள். வாஜ்பாயால் ஈர்க்கப்பட்டு பாஜகவுடன் தோழமை உறவு வைத்துக்கொண்ட நிதீஷுக்கு, ஆரம்ப காலம் முதலே நரேந்திர மோடியின் ‘குஜராத் பாணி’ என்ற தற்பெருமை பிடிக்கவில்லை. இருந்தாலும் அவ்வப்போது சமரசங்களைச் செய்துகொண்டு கூட்டணியில் நீடிக்கிறார். சமீப காலத்தில் ஹிஜாப் பிரச்சினையை பிஹாரிலும் கிளப்ப பாஜகவினர் முயன்றபோது, இதையெல்லாமா பிரச்சினையாக்குவது என்று கடிந்துகொண்டு அவர்களை அடக்கினார். இருந்தாலும் அவர்களுடைய துடுக்குத்தனங்களை அடக்கும் அளவுக்குத் தனக்கு அரசியல் செல்வாக்கு இல்லாவிட்டாலும் அரசியல் சாதுர்யம் இருக்கிறது என்று காட்ட இந்த இஃப்தார் விருந்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இதை ஏற்பாடு செய்தவர் தேஜஸ்வி யாதவ் என்பதுடன் இதில் கலந்துகொண்ட இன்னொரு முக்கிய அரசியல்வாதி சிராக் பாஸ்வான் என்பதும் முக்கியமானது. எந்த சிராக் பாஸ்வான் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பைப் பேரவை பொ துத் தேர்தலில் குலைத்தாரோ அவரே கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நிதீஷ் கலந்து கொண்டது அவருடைய எண்ண மாற்றத்தைக் காட்டுகிறது என்று ஊகிக்கலாம்.

போச்சஹான் போச்சே

சமீபத்தில் நடந்து முடிந்த போச்சஹான் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் படுதோல்வி அடைந்தார். இந்தத் தோல்விக்குக் காரணம் எது என்று ஆராய்ந்த கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. கட்சியை இதுவரை ஆதரித்து வந்த இந்து சமுதாயத்தின் உயர் சாதிப்பிரிவினரான பூமிஹார்கள் (நிலஉடைமையாளர்கள்), பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மீனவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த பாஸ்வான்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர் என்பதே அது.

சிராக் பாஸ்வானை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்க்காமல், அவருடைய சித்தப்பா பசுபதி குமார் பாஸ்வானுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறது பாஜக. ஆனால் அவருக்கு மக்களிடையே செல்வாக்கு கிடையாது. இதனால் அதிருப்தியடைந்த பாஸ்வான் சமூகத்தவர் பாஜக வேட்பாளருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். விகாஷ் ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானியை அமைச்சரவையிலிருந்து விலகச் செய்த பாஜக தலைமையின் செயலும் மீனவர் சமூகத்தால் விரும்பப்படவில்லை. இவ்வாறு கள யதார்த்தம் புரியாமல், மத்திய அமைச்சர் பூபேஷ் யாதவின் சொல்படி மாநில பாஜக செயல்படுவதால் கட்சி வேகமாக மக்களுடைய ஆதரவை இழந்துவருவதாக கட்சி வட்டாரங்களே வருத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் சுஷீல் குமார் மோடியும் சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாநிலங்களவைக்கு 2020-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாநில அரசியல் குறித்து அதிகம் கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார். இம்முறை அவராலேயே பொறுக்க முடியாமல் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

கடந்த மாதம் பிஹார் சட்டப் பேரவையிலேயே சட்டப் பேரவைத் தலைவரும் பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹாவும் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். சின்ஹாவின் தொகுதி வளர்ச்சி தொடர்பாக பேரவைத் தலைவர் எழுப்பிய பிரச்சினைதான் மோதலுக்குக் காரணம் என்றாலும் பாஜகவினரின் விஷமங்களால் எரிச்சல் அடைந்துவரும் நிதீஷ் குமார் பகிரங்கமாகவே தன்னுடைய எதிர்ப்பைக்காட்ட அந்தத் தருணத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பிஹாரிலிருந்து வெளியே...

தொடர்ந்து பிஹார் முதலமைச்சராகவே பதவி வகிக்கும் நிதீஷ் குமாருக்கு மாநில அரசியல் புளித்துவிட்டது என்றும் பலர் கருதுகின்றனர். அதிக அதிகாரமும் நிதி வசதியும் இல்லாமல் இனியும் முதலமைச்சராக இருப்பதால் பெயர்தான் கெடும் என்று தெரிந்துவிட்டதால் தேசிய அரசியலுக்குச் செல்ல நிதீஷ் விரும்புகிறார் என்கின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் எளிதில் வெற்றிபெற முடியாது. சில - பல மாநிலக் கட்சிகள் ஆதரவு இருந்தால்தான் முடியும். பாஜகவை ஆதரிக்கும் மாநிலக் கட்சிகள் மிகவும் குறைவு. எனவே கருத்தொற்றுமை அடிப்படையில்தான் வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், பாஜகவைச் சேராதவர் என்பதற்காக நிதீஷை ஆதரிக்க சிலர் முன்வரலாம். அவர் மதச்சார்பற்றவர் என்பதுடன் லோகியாவின் சீடர் என்பது அவருடைய பலம். பிஹாரைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராவது நமக்குப் பெருமை என்று லாலு பிரசாதே ஆதரிக்கவும் கூடும். என்ன இருந்தாலும் அவர் இளவயது நண்பராயிற்றே! லாலு முதலச்சராக வருவதற்கு தொடக்க காலத்தில் உறுதுணையாக இருந்தவர் நிதீஷ் குமார்தான்.

இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும் என்று, வேறு யார் - காங்கிரஸ் கட்சிதான் வலியுறுத்துகிறது. காங்கிரஸ் தலைமையேற்பதை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விரும்பவில்லை. ஆனால் கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்ததைப் போல திரிணமூல் எங்கும் சாதித்துவிடவில்லை. எனவே அது மேற்கு வங்கத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டிய மாநிலக் கட்சிதான் என்பதே உண்மை. பஞ்சாபில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பாஜகவுக்கு தேசிய மாற்றுக்கட்சி தான்தான் என்று ஆம் ஆத்மி கட்சியும் கருதுகிறது. எனவே எதிர்க்கட்சி கூட்டணியில் சேருமா, சேராதா என்றே புரியாத நிலையில் அது தன்னைப் பெரிய சக்தியாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறது. நிதீஷ் குமார் பொது வேட்பாளர் என்றால் ஆஆகவும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேரக் கூடும்.

முன்னுதாரணம்

2016-ல் இதே போன்ற இஃப்தார் விருந்தில்தான் அரசியல் அணி மாற்றம் ஏற்பட்டது. அப்போது லாலு பிரசாத் யாதவ் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் கலந்துகொண்டார். பிறகு ‘மகா கட்பந்தன்’ என்ற மாபெரும் அரசியல் கூட்டணி உருவானது. அதில் ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் இணைந்தன. ஆட்சியையும் பிடித்தன. ஆனால் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவை ஏற்குமாறு லாலு நிர்பந்தம் செய்ததை நிதீஷ் ஆரம்பம் முதலே விரும்பவில்லை. ஊழல் குற்றச்சாட்டு தேஜஸ்வி மீது எழுந்தபோது தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி, பிறகு திடீரென முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவுடன் பேசி அந்தக் கட்சி ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சரானார் நிதீஷ் குமார். எனவே நிதீஷின் இந்த நிகழ்வு இரண்டாம் முறையாக அரங்கேறுவதால் நிச்சயம் அணி மாறும் என்று அரசியல் பார்வையாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

அரசியல் பார்வையாளர்கள் கற்பனை செய்கிறபடியெல்லாம் அரசியலில் நடப்பதில்லை. ஆனால் பாஜகவையே காலம்பூராவும் பிடித்துத் தொங்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று காட்ட, சாணக்கியரான நிதீஷ் குமார் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.

இஃப்தார் என்ற ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆன்மிகச் சடங்கு என்றாலும் அதில் அரசியல் கட்சிகள் பங்கேற்பது அணி சேர்க்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த விருந்து நிகழ்ச்சிக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இல்லை என்று நிதீஷ் குமார் கூறுகிறார். இந்த விருந்தில் பாரதிய ஜனதா சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஷாநவாஸ் உசைனும் அதையே எதிரொலிக்கிறார். ஆனால் அதில் பங்கேற்ற தேஜ் பிரதாப் யாதவ், முக்கியமான ரகசியமொன்றை நிதீஷ் தன்னிடம் கூறினார் என்று கூறியிருக்கிறார். நிருபர்கள் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டும் அதை அவர் சொல்ல மறுக்கிறார். லாலுவின் சீமந்த புத்திரரான தேஜ் பிரதாப் யாதவ் கொஞ்சம் வித்தியாசமானவர். அம்மா – அப்பாவுக்குச் செல்லம். தம்பிக்கு பெரிய தலைவலி. இருந்தாலும் அரசியல் பார்வையாளர்கள் அவர் சொல்வதிலும் ஏதோ இருப்பதாக நம்புகின்றனர். பார்க்கலாம்!

Related Stories

No stories found.