அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு...16 கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கணவருடன் சத்யா பன்னீர்செல்வம்
கணவருடன் சத்யா பன்னீர்செல்வம்

பண்ருட்டி தொகுதி அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் எம்.எல். சத்யா பன்னீர்செல்வம்
முன்னாள் எம்.எல். சத்யா பன்னீர்செல்வம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். அதிமுகவைச் சேர்ந்த இவர், 2011 - 2016-ம் ஆண்டு வரை, பண்ருட்டி நகரசபை தலைவராக பதவி வகித்தார். அவரது மனைவி சத்யா, 2016 - 2021-ம் ஆண்டு வரை, அதிமுக சார்பில், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.

பன்னீர்செல்வம் நகரசபை தலைவராக இருந்தபோது, நகராட்சி ஆணையர் பெருமாளுடன் சேர்ந்து, பேருந்து நிலையம் அருகே, நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை வாகன நிறுத்துமிடமாக ஏலம் விட்டதில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் நேற்று காலை, 6:30 மணியளவில், லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீஸார், பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

சத்யா பன்னீர் செல்வத்தின் வீடு
சத்யா பன்னீர் செல்வத்தின் வீடு

மேலும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான பண்ருட்டி கந்தன்பாளையத்தைச் சேர்ந்த, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் பெருமாள், பண்ருட்டி இந்திரா காந்தி சாலையைச் சேர்ந்த பத்திர எழுத்தர் செந்தில்முருகன், திருவதிகை பிரசன்னா என்கிற சம்பத்ராஜ், சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த மோகன்பாபு ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதேநேரத்தில், சென்னை, கொளத்தூரில் வசிக்கும், பண்ருட்டி நகராட்சி முன்னாள் ஆணையர் பெருமாள் (66) வீட்டிலும் அதேநேரத்தில் சோதனை நடந்தது. நேற்று இரவு வரை நடந்த சோதனையில், முறைகேடு தொடர்பான ஆவணங்கள், நிலம் மற்றும் மனைகள் உட்பட சொத்துக்கள் தொடர்பாக மொத்தம் 47 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் சொத்து மதிப்பு, 16 கோடி ரூபாய் என லஞ்ச ஒழிப்பு போலீஸார்  தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in