ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பின் அதிர்ச்சியூட்டும் பின்னணி தெரியுமா?

ராஜ கண்ணப்பன் இலாகா பறிப்பின் அதிர்ச்சியூட்டும் பின்னணி தெரியுமா?

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா திடீரென இன்று மாற்றப்பட்டுள்ளது. தற்போது அவருக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலாகா பறிப்பின் பின்னணியில் என்ன நடந்தது என திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் சொன்ன விஷயங்கள் அதிர்ச்சியாக இருந்தன.

கடந்த மார்ச் 14- ம் தேதி தமிழகப் போக்குவரத்துத் துறை சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். ஆர்டிஓ அலுவலகப் பணியாளர்களின் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கு லஞ்சம் பெறுவதாக நடராஜன் மீது புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் அவரது வரவு - செலவு கணக்கு அடங்கிய டைரி, பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி போக்குவரத்து துணை ஆணையராக நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. "இதுதான் ராஜ கண்ணப்பன் மீது விழுந்த முதல் பிளாக் மார்க்" என்று கூறிய திமுகவினர், அடுத்து ஸ்வீட் விவகாரத்தை எடுத்துவிட்டனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளி ஸ்வீட்டை ஆவின் நிறுவனத்தில் வாங்காமல் கமிஷனுக்காக வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் வாங்க டெண்டர் கொடுக்க ஏற்பாடு நடைபெற்றது. இதுகுறித்த செய்தி பரவியதுடன் அந்த டெண்டர் ஆவின் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டது. "இந்த விஷயத்திலும் துறை அமைச்சரான ராஜ கண்ணப்பன் மீதே சந்தேக நிழல் விழுந்தது. அவர் மீது விழுந்த அடுத்த பிளாக் மார்க் இது. எனவே, அவரிடம் இருந்த இலாகாவைப் பறிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். தற்போது முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதிப் பெயரை கூறி ராஜ கண்ணப்பன் பேசிய விவகாரம், உடனடியாக அவரின் இலாகாவைப் பறிக்க வைத்து விட்டது" என்று திமுகவினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.