’மோடிக்கு எதிர்ப்பு வேண்டாம்’ திமுக தலைமையின் திடீர் உத்தரவு

’மோடிக்கு எதிர்ப்பு வேண்டாம்’
திமுக தலைமையின் திடீர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி

‘தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடியை விமர்சித்தோ, எதிர்த்தோ எந்தப் பதிவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்’ என திமுகவினருக்கு கட்சித் தலைமை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த கால கருப்புக்கொடி போராட்டத்தில் வைகோ
கடந்த கால கருப்புக்கொடி போராட்டத்தில் வைகோ

திமுக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த கடந்த காலங்களில், பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் ’கோபேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதை இந்திய அளவில் முதலிடத்தில் வைத்திருப்பார்கள் திமுகவைச் சேர்ந்த நெட்டிசன்கள். கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டு மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்த வரலாறும் உண்டு.

கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி, திருவிடந்தையில் ராணுவத் தளவாட கண்காட்சி தொடக்கவிழா மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது, சென்னை முழுக்க திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாகக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்தது. விமான நிலையத்திலிருந்து திருவிடந்தைக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்த நிலையில், ஆகாய மார்க்கத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.

பிரதமருடன் முதல்வர்
பிரதமருடன் முதல்வர்

தற்போது காட்சிகள் மாறியுள்ளன. எதிர்க்கட்சியான திமுக ஆட்சியில் இருக்கிறது. இப்போதும் பிரதமர் வருகிறார். ஆனால் திமுகவின் நிலை அப்படியேயில்லை. கடந்த அதிமுக ஆட்சியின்போது அனுமதி பெறப்பட்டு, தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. விருதுநகரில், பிரதமருடன் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் மும்முரமாக செய்து வருகின்றன.

மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பிறகு, பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறையாகும். இது தொடர்பான அறிவிப்பு வெளியானபோதே, சில ஆர்வக்கோளாறுகள் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை மீண்டும் இணையத்தில் உலவ விட்டுவிட்டனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த காலங்களைப்போல பிரதமரின் தமிழக வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்து, ஐடி விங் நிர்வாகிகளில் சிலர் ஆர்வக்கோளாறில் இப்படி ஏதேனும் பதிவை வெளியிட்டோ அல்லது மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தோ அரசுக்கு சிக்கல் ஏற்படுத்திவிடக் கூடாது என நினைக்கும் திமுக தலைமை, அதுபோன்ற காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது என இப்போதே ஐடி விங்க் உள்ளிட்ட தகவல் தொடர்பாளர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறதாம்.

திமுக எதிர்ப்பு காட்டக்கூடாது என்ற முடிவெடுத்து கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவின் நேசக்கட்சி என்பதால் அக்கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பேயில்லை. சிறப்பான முறையில் வரவேற்க அவர்களும் தயாராகிவருகிறார்கள். அதனால், தமிழகத்தில் இந்தமுறைதான் எதிர்ப்புகள் இல்லாமல் வரவேற்பை மட்டுமே சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி.

பேத்தியுடன் ஸ்டாலின்
பேத்தியுடன் ஸ்டாலின்

தமிழகம் வரும் பிரதமருக்கு திமுக நீட்டும் நேசக்கரம் தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெறக்கூடும். எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடியை திரும்பிப்போகச் சொன்ன திமுக, அவரை சிறப்பாக வரவேற்க தயாராக ஏற்பாடுகளைச் செய்வது அரசியல் மாற்றத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.

பிரதமரை வரவேற்பது குறித்த திமுகவின் நிலைப்பாட்டை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். ’’எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம். ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைக்க அவரை நாங்கள் அழைத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அவர் வரவுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் எப்படி அவருக்கு கருப்புக்கொடி காட்ட முடியும்? எங்களுக்கு எதிராக அவர் ஏதாவது பேசியிருந்தால் நாங்கள் அவரை தவிர்த்திருப்போம். பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல, இந்துத்துவா தான் எதிரி. தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் அதிமுக ஆட்சியில் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டினோம். இப்போது நாங்கள் விடுக்கும் கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதனால் நாங்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்பது ஆர்.எஸ்.பாரதியின் விளக்கம்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

Related Stories

No stories found.