
திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்த்துறை அமைச்சருமான கே.என்.நேரு, மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரைச் சந்தித்த நிகழ்வு சர்ச்சையாகியிருக்கிறது. பங்காரு அடிகளார் நாற்காலியில் அமர்ந்திருக்க அவரது காலுக்கடியில் தரையில் அமைச்சர் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியிருக்கிறது. சங்கராச்சாரியார் ஆசனத்தில் இருக்க, பொன்.ராதாகிருஷ்ணனோ மற்றவர்களோ கீழே தரையில் உட்கார்ந்திருந்தால் அதை கேலி செய்கிற திமுகவினரே இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? என்று பாஜகவினர் இந்தச் சம்பவத்தை விமர்சித்துவருகிறார்கள். திமுக தொண்டர்களும் கே.என்.நேருவின் இந்தச் செயலை கண்டித்துவருகிறார்கள்.
இதனிடையே திமுக எம்பி ஒருவரே இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று ட்விட் போட்டுள்ளார். தர்மபுரி திமுக எம்பியும், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான டாக்டர் எஸ்.செந்தில்குமார் எம்பி தனது ட்விட்டில், "கடவுளை வணங்குவதும் மறுப்பதும் தனி மனித உரிமை. சோ கால்டு (so called) (ஆ)சாமியார்களை சந்திப்பதும் தனிமனித விருப்பம். ஆனால், எக்காரணம் கொண்டும் சுயமரியாதையை இழக்க வேண்டாம். பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையைக் காப்பதே" என்று கூறியுள்ளார். அமைச்சரின் போட்டோ போலவே, எம்பியின் இந்த ட்விட்டும் வைரலாகியிருக்கிறது.