கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவது நியாயம்தானா?

அதிமுகவினரிடம் கேட்ட அப்பாவு
கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவது நியாயம்தானா?

தமிழக அரசின் 2022-23 நிதி ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தற்போது தாக்கல் செய்துவருகிறார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, அதிமுக அரசின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். திமுக அரசு அமைந்த பின்னர், 2021-22 நிதி ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்தார்.

இந்நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவைக் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைப் போல மின்னணு நிதிநிலை அறிக்கையாக நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.

அதிமுக உறுப்பினர்களின் கூச்சலுக்கு இடையில்தான் நிதிநிலை அறிக்கை உரையை அவர் வாசிக்கத் தொடங்கினார். அப்போது “என்னுடைய அனுமதி இல்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வார்த்தைகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, “சென்ற நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது எதிர்க்கட்சியினர் பேச 2 மணி 2 நிமிடம் அனுமதி கொடுத்தேன். வெளிநடப்பு செய்வது என்றால் வெளிநடப்பு செய்திருக்கலாம். கூச்சல் குழப்பம் ஏற்படுத்துவது நியாயம்தானா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, பட்ஜெட் உரையைப் புறக்கணித்துவிட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.