வழக்கு விசாரணைக்காக உறவினர்களை தொந்தரவு செய்யக்கூடாது

ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணைக்காக உறவினர்களை தொந்தரவு செய்யக்கூடாது

‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழக்கு விசாரணைக்காக உறவினர்களை தொந்தரவு செய்யக்கூடாது’ என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை போலீஸார் 6 தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி சகோதரி லட்சுமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “எனது மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை டிச.17-ல், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதுள்ள வழக்கு தொடர்பாக விசாரிக்க திருத்தங்கல் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் போலீஸார் துன்புறுத்தி கையெழுத்து பெற்றுள்ளனர். எனவே, முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும், எனது மகன்கள் மற்றும் ஓட்டுநரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்

இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, “குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள், விசாரணை செய்யுங்கள். ஆனால் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம்” என்று கூறி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.