திமுகவை குட்ட ஆரம்பித்திருக்கும் கூட்டணிக் கட்சிகள்!

பாஜகவை நெருங்கியதால் வந்த பயமா?
திமுகவை குட்ட ஆரம்பித்திருக்கும் கூட்டணிக் கட்சிகள்!

கடந்த 24-07-22-ம் தேதியிட்ட காமதேனு மின்னிதழில் ‘திமுக அரசை தட்டிக்கேட்க கூட்டணி கட்சிகள் தயங்குவது ஏன்? - அனுசரணையா... அட்ஜஸ்ட்மென்டா?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது தமிழக அரசியலில் காட்சிகள் மாற ஆரம்பித்திருக்கின்றன. ஆம், தற்போது திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலின் அரசைத் மெல்லத் தட்டிக்கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

மாற்றம் வந்திருப்பதற்கு ஒரு சில உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநில அரசின் மின்கட்டண உயர்வு அறிவிப்பு உள்ளிட்டவற்றை கடுமையாக எதிர்த்திருக்கிறார். கனியாமூர் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த விவகாரத்தில் அரசின் அலட்சியப் போக்கை கண்டித்ததோடு இன்னமும் கடுமையாக விமர்சித்தும் வருகிறது. அக்கட்சியின் வன்னிஅரசு உள்ளிட்டவர்கள் நேரடியாக திமுக அரசை நோக்கி கேள்விகளை முன்வைக்கும் நிலையில், திருமாவளவனும் கனியாமூர் பள்ளி விவகாரம், மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்.

“லாக்கப் மரணங்கள், ஆளும் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். இனி, இதுபோல் நடக்காமல் இருக்க கஸ்டடி மரணங்கள் குறித்து உண்மையைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்” என்று அரசுக்கு ஆலோசனையும் சொன்னார் திருமா. திமுக அரசுக்கு யோசனை சொல்லிக் கொண்டே அதிமுக சைடிலும் பாச அம்பை பதமாக வீசும் திருமா, “உடல்நலம் சரியில்லாத அம்மாவைப் பார்க்க வானகரம் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அது அதிமுக பொதுக்குழு நடந்த நாள் என்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். பொதுக்குழுவுக்கு வந்திருந்த அதிமுகவினர் என்னைச் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கியது நெகிழ்வாயிருந்தது” என்று பதிவு போட்டார்.

தமிழ்நாட்டில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக சொன்னபோது, “பாஜகவிடம் அதிமுக உஷாராக இருக்க வேண்டும்” என்று தோழமையுடன் எச்சரிக்கை மணி அடித்தார் திருமா. கம்யூனிஸ்ட்கள், சிறுத்தைகளைப் போலவே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் திமுக அரசுக்கு எதிராக குரலை உயர்த்தியிருகிறார். ”திமுக சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருந்தாலும் வன்னியர்களின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை. இதையெல்லாம் இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது” என்று வேகம்காட்டுகிறார் வேல்முருகன்.

காங்கிரஸ் கட்சியிலிருந்தும் கசப்புக்குரல் கேட்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் தான் முதல் ஆளாக பிரகடனம் செய்தார். அப்போது போட்டுக் கொண்ட எழுதப்படாத ஒப்பந்தத்தின்படி அண்மையில் ராஜ்யசபாவின் ஒரு இருக்கையையும் சொந்தக் கட்சியினரின் மனப் புழுக்கத்தையும் பொருட்படுத்தாது காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தார் ஸ்டாலின். டெல்லியில் திமுக அலுவலகத் திறப்பு விழாவில் சோனியா காந்திக்கு முக்கியத்துவம் அளித்தார்.

அவர் இத்தனை நெருக்கம் காட்டினாலும் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை தமிழக காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இதற்கு மோடியைக் காரணம் காட்டினாலும், பாஜகவோடு திமுக காட்டிவரும் திடீர் நெருக்கத்தின் திகைப்பே இதன் பின்னணியில் இருக்கும் நிஜமான காரணம் என்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் மோடியிடம் ஸ்டாலின் காட்டிய நெருக்கம் தமிழக அரசியல் அரங்கில் ஒரு வாரத்துக்கும் மேலாகவும் அதிசயமாகப் பேசப்பட்டது. மோடியை தொட்டு ஸ்டாலின் பேசியதும், ஸ்டாலினை தட்டிக்கொடுத்து மோடி சிரித்ததும் தான் கடந்த வாரத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட செய்தியாக இருந்தது. இதெல்லாமுமே காங்கிரசின் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்தியது.

கருணாநிதி சிலை திறப்பு விழா
கருணாநிதி சிலை திறப்பு விழா

காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் திமுகவை சந்தேகப்படுவதிலும் பதற்றமாவதிலும் அர்த்தமிருக்கிறது. எப்போதும் மத்திய அரசை எதிர்த்தே பேசிவந்த திமுகவின் நடவடிக்கைகளில் அண்மைக் காலமாகவே வியத்தகு மாற்றம் தெரிகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமரை ‘கோ பேக் மோடி’ என்று சொன்ன திமுக... இப்போது மோடி சென்னை வந்தபோது, ‘சமூக வலைதளங்கள் மூலம் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்தது.

திமுகவின் இந்த அணுகுமுறையால் இம்முறை எவ்வித சங்கடமும் சஞ்சலமும் இல்லாமல் சந்தோசமாய் தமிழகம் வந்துவிட்டுப் போனார் மோடி. அதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே ஸ்டாலினுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார் என்றால் திமுக அரசு எவ்வளவு தூரம் இணங்கிப் போயிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இப்படி பாஜகவிடம் திமுக காட்டத் தொடங்கி இருக்கும் திடீர் இணக்கமானது இவர்கள் பாஜகவுடன் போய்விடுவார்களோ என்ற சந்தேகத்தையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டாக்கி இருக்கிறது. அதனால் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செஸ் ஒலிம்பியாட் விவகாரத்தில் சற்று தூக்கலாகவே கொந்தளித்துவிட்டார். விளம்பரப் பதாகையில் மோடியின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைதுசெய்யப்படாததை முன்னிறுத்தி காட்டமாகக் கேள்வி எழுப்பிய அவர், ’’விளம்பரப் பதாகையில் பாஜகவினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கின்றனர். இந்தச் செயலை செய்தவர்களை ஏன் காவல்துறை கைதுசெய்யவில்லை. பிரதமர் மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கும் வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாகவே சிலர் மோடி படத்தின் மீது கருப்பு மையைப் பூசினார்கள். அவர்களை கைதுசெய்வதன் மூலம் மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைத்துவிட முடியாது. இத்தகைய பாரபட்சமான போக்கை காவல்துறையினர் கைவிட வேண்டும். காவல்துறையினர் பாஜகவினரின் மனதை குளிரவைக்கும் வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது” என்று கடுமையாகச் சாடினார். காவல்துறைக்கு அமைச்சர் முதல்வர் ஸ்டாலின் எனத் தெரிந்தும் அழகிரி இப்படி கோபம் காட்டியது ஸ்டாலினுக்கும் உறைக்கட்டும் என்பதால் தான் என்கிறார்கள் அரசியல் வட்டத்தில் இருப்பவர்கள்.

முதல்வருடன் திருமாவளவன்
முதல்வருடன் திருமாவளவன்

திமுகவின் தொடர்ச்சியான வேறு சில செயல்களும் கூட்டணிக் கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடியதால் காங்கிரசுக்கும், பட்டினப்பிரவேசம் நடத்த அனுமதித்ததிலும் பிரியாணித் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு அனுமதி மறுக்கப்பட்டதிலும் விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் திமுக மீது அதிருப்தியை உண்டாக்கியது. அதேபோல், சென்னை அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்ட கருணாநிதியின் உருவச் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவை அழைத்து வந்து திறக்க வைத்ததும் கூட்டணித் தோழர்கள் அனைவருக்குமே வருத்தம் தான். அத்துடன், கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரை காப்பாற்ற காவல் துறை எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் கூட்டணி பங்காளிகள் ரசிக்கவில்லை.

திமுகவின் இதுபோன்ற செயல்கள் எல்லாம் அந்தக் கட்சி மெல்ல மெல்ல தனது பாதையையும் பயணத்தையும் மாற்றிக்கொள்ள எத்தனிக்கிறதோ என்ற அச்சத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே அவர்களும் இதுவரை அனைத்திலும் அடக்கிவாசித்த தங்களின் போக்கை மாற்றிக் கொண்டு தற்போது தோழமையுடன் தங்களது எதிர்ப்புகளைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக திசைமாறுவதாக சந்தேகம் இருந்தாலும் திமுக தரப்பில் இதையெல்லாம் திடமாக மறுக்கிறார்கள். “உறவுக்குக் கைகொடுப்போம்... உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதுதான் எப்போதும் எங்கள் கொள்கை. எதிர்க்கடசியாக இருந்த போது எதிர்ப்புக் காட்டியது போல் இப்போதும் பிரதமரை அத்தனை மூர்க்கமாக எதிர்க்க முடியாது. ஏனென்றால் இப்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். இந்தத் தருணத்தில் பிரதமர் தமிழகம் வரும்போது அவருக்கு உரிய மரியாதை கொடுப்பது தான் ஆளும்கட்சிக்கான மரபாக இருக்க முடியும். திமுக அரசும் அதைத்தான் செய்திருக்கிறது.

சென்னை விழாவில் பிரதமரிடம் முதல்வர் நேசம் பாராட்டினாலும் அதன்பிறகு நாடாளுமன்றத்தில் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பி-க்கள் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியதையும் இங்கே கவனிக்க வேண்டும். ஆகவே, திமுக கூட்டணிக் கட்சிகள் பாஜகவுடன் திமுக சுமுகமாகப் போய்விடுமோ என அஞ்சத் தேவையில்லை. கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் எப்போதுமே உரிய மரியாதை அளிப்பவர் எங்கள் தளபதி. திமுக கூட்டணியைக் கொள்கைக் கூட்டணி என பிரகடனம் செய்திருக்கும் அவர், அடுத்தடுத்த தேர்தல்களுக்கும் இந்தக் கூட்டணி தொடரவேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறார்” என்கிறார்கள் திமுக தரப்பில்.

ஆளும்கட்சியாக இருந்துகொண்டு தொட்டதுக்கெல்லாம் பிரதமரையும் மத்திய அரசையும் எதிர்க்கமுடியாது என்பது உண்மைதான். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் தமிழகத்துக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறமுடியும் என்பதுகூட ஸ்டாலினின் தற்போதைய மாற்றத்துக்கான காரணமாக இருக்கலாம். கூட்டணிக் கட்சிகளுக்கும் இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர்களி டமிருந்து அரசுக்கு எதிரான விமர்சனங்கள் வருகிறதென்றால் யோசிக்க வேண்டிய விஷயம் தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in