‘இந்தி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது திமுக’ - ஓபிஎஸ் காட்டம்

‘இந்தி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது திமுக’ - ஓபிஎஸ் காட்டம்

இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருக்கிறார். ஒருபக்கம் இந்தியை எதிர்த்துக் கொண்டே, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விளம்பரப்படுத்துகிறார்கள் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை திமுக அரசு பயன்படுத்திவருவதாகச் செய்திகள் வந்துள்ளன. நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழுத் தலைவர் என்ற முறையில் ஆட்சிமொழிக் கூட்டத்தில், ‘ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்’ என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதை ‘இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இப்படியெல்லாம் பேசிவிட்டு தமிழ்மொழியை வளர்க்க வேண்டிய முதல்வர், அதைச் செய்யாமல் தன்னைப் பிரபலப்படுத்தும் வகையில் இந்தியை வளர்த்துவருவதாகத் தகவல்கள் வருகின்றன” எனக் கூறியிருக்கிறார்.

மேலும், “முதல்வர் மு.க.ஸ்டாலினை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அவரது புகழ் பரவ வேண்டும் எனும் நோக்கத்தில் திமுக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ஒருபக்கம் இந்தித் திணிப்பு எனச் சொல்லி போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என திமுக இரட்டை வேடம் போடுகிறது” என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in