`உச்சநீதிமன்ற தீர்ப்பால் திமுகவின் 'பி டீம்' முகத்திரை கிழிப்பு'- மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி `உச்சநீதிமன்ற தீர்ப்பால் திமுகவின் 'பி டீம்' முகத்திரை கிழிப்பு'- மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Updated on
1 min read

``அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பால், திமுகவின் பி டீம் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது'' என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார் .

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குன்னத்தூர் அம்மா (ஜெயலலிதா) கோயிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஏற்பாட்டில் நடந்த 51 ஜோடிகளின் திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.23) நடத்தி வைத்தார். விழாவில் மணமக்களை வாழ்த்தி எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``கடந்தாண்டு ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குன்னத்தூரில் உள்ள அம்மா (ஜெயலலிதா) கோயில் வந்து வேண்டிக்கொண்ட சில நிமிடங்களில் அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு கிடைத்தது. சக்தி மிக்க தெய்வங்களால் கிடைத்த தீர்ப்பு இது.

இத்தீர்ப்பால் திமுகவின் பி டீமாக செயல்பட்டவர்களின் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு என்றும் நன்மை செய்கிற இயக்கம் அதிமுக. 34 ஆண்டு காலம் ஆளுங்கட்சியாக இருந்து மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றி பிரதான பேரியக்கம் இது. சாதாரண நிலையில் உள்ள தொண்டர்களும் உயர்ந்த இடத்திற்கு வரும் முடியும் என்பதை நிரூபித்த கட்சி.

திமுக அப்படியல்ல. அது ஒரு குடும்ப கட்சி. அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த 7 மாத காலமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தீர்கள். நான்காக உடைந்து விட்டது என்றெல்லாம் செய்தி போட்டீர்கள். ஒன்றாகி விட்டது என இனிமேலாவது செய்தி வெளியிடுங்கள்.

எம்ஜிஆர் மறைவிற்கு பின் அதிமுகவை கட்டிக்காத்த ஜெயலலிதா எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் இருக்கும் என கூறினார். அதற்கு இன்றைய தீர்ப்பு சாட்சியாக உள்ளது. இன்றைய தினம் மண விழா காணும் 51 ஜோடிகளும் ராசியான ஜோடிகள். உங்கள் திருமண நன்னாளிலில் அதிமுக பொதுக்குழு செல்லும் என நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

அதே போல ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசார மேடையில் ஏறி பேசிய சில நாட்களில் பாஜக மூத்த நிர்வாகி ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மார்ச் 2-ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது அதிமுக வென்றது என்ற வெற்றி செய்தி வரும்'' என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு நிறைவுக்கு பின் முன்னாள் அமைச்சர் உதயக்குமார், அதிமுகவின் கட்டிக்காக்கும் காவல் தெய்வம் எடப்பாடியார் என விழா மேடையில் கோஷம் எழுப்ப அதிமுக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in