மத்திய அரசின் இந்தி திணிப்பு: கண்டித்து திமுக தொண்டர் தீக்குளித்து சாவு

தங்கவேல்
தங்கவேல்

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே  திமுக பிரமுக ஒருவர் தீக்குளித்து இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

தங்கவேல் எழுதி வைத்துள்ள பதாகை
தங்கவேல் எழுதி வைத்துள்ள பதாகை

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பி. என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு  தாழையூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85).  நங்கவள்ளி திமுக  முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளரான இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி,  ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார். 

மேலும் திமுக  ஆட்சியின் போது பல்வேறு போராட்டங்களில்  கலந்து கொண்டு அவர் சிறை சென்றுள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பரிசுகளையும், பாராட்டுக்களையும்  பெற்றுள்ளார். இந்நிலையில் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளது. இதனால் தங்கவேல்  மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பி. என் .பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 - வது வார்டு தாழையூர்  திமுக கட்சி அலுவலகம் முன்பு  இன்று காலை  11 மணி அளவில்  தன்மீது  பெட்ரோல்  ஊற்றி தீ  வைத்துக் கொண்டார். இதனால் தீப்பற்றி எரிந்ததும்  தங்கவேலின்  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  ஓடி வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தங்கவேல் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தங்கவேலுவின்  சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தங்கவேல் தீக்குளிப்பதற்கு முன்  சேலம் பி.என்.பட்டி பேரூர் செயலாளர் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் . மேலும் வெள்ளை தாளில். " மோடி அரசே மத்திய அரசே, அவசர இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க இந்தி  கோமாளி எதுக்கு? இந்தி எழுத்து மாணவ மாணவிகள் வாழ்க்கையைப்  பாதிக்கும்.  இந்தி ஒழிக இந்தி ஒழிக" என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார். 

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in