நாகர்கோவில் மாநகராட்சியில் போராடித் தோற்றது பாஜக

முதல் மேயராக வாகை சூடிய திமுக
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சி

தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் பதவிகளில் இந்த ஒரு மாநகராட்சியில் திமுகவுக்கு எதிராக பாஜக களம் இறங்கியது. இதற்கு அதிமுகவும் ஆதரவும் கொடுத்தது. இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பாஜக, திமுகவின் மேயர் வேட்பாளர் மகேஷிடம் தோல்வியைத் தழுவியது.

மகேஷ் (திமுக)
மகேஷ் (திமுக)

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரம், தமிழகத்திலேயே படித்தவர்கள் நிறைந்த பகுதி என மட்டில்லா சிறப்புக் கொண்டது நாகர்கோவில் மாநகரம். முந்தைய அதிமுக அரசு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது நாகர்கோவிலை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது. அந்தவகையில் நாகர்கோவில் மாநகரம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இதனால் முதல் மேயர் யார் என்பதில் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 24 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வென்றது. இதன்மூலம் திமுக கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைத்தன. பாஜக 11 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சைகள் இரு இடங்களிலும் வென்றிருந்தன. அதிமுக, பாஜக கூட்டணியின் பலம் 18 ஆக மட்டுமே இருந்தது.

கூடுதல் கவுன்சிலர்களைத் தங்கள் பக்கம் இழுக்க பாஜக பல முயற்சிகளும் செய்தது. இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுக 28 வாக்குகளும், பாஜக 24 வாக்குகளும் பெற்றன. திமுக கூட்டணியில் 32 வாக்குகள் இருந்த நிலையில், அதில் நான்கு வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகத் தேர்தலில் விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய அதிமுக அரசிடம், நாகர்கோவிலில் பாஜக வலுவாக இருப்பதால் நாகர்கோவிலை மாநகராட்சியாக்க பாஜகவே கோரிக்கை விடுத்தது. ஏற்கெனவே நாகர்கோவில் நகராட்சியைக் கையில் வைத்திருந்த பாஜக இதன்மூலம் தன் செல்வாக்கை இழந்திருக்கிறது. ஆனாலும் சுப்பிரமணியபுரம் படத்தில் ‘உயிர் பயத்தை காட்டிட்டியே பரமு!’ என்னும் வசனம் போல் திமுகவை நெருக்குதலுக்கு உள்ளாக்கி தவிக்கவைத்து தோல்வியைச் சந்தித்திருக்கிறது பாஜக!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in