மகளிர் உரிமை மாநாடு வாரிசுகள் ஒன்றுகூடி நடத்திய நாடகமா?

சாடும் பாஜக... சமாளிக்கும் திமுக!
மகளிர் உரிமை மாநாட்டில்...
மகளிர் உரிமை மாநாட்டில்...

அமைச்சர் உதயநிதியின் சனாதன சர்ச்சைப் பேச்சால் இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு என்ற பிரச்சாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு களைகட்டியது. அதை முறியடிக்கும் விதமாக, இந்தியா கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளின் பிரதான மகளிர் முகங்களை சென்னைக்கு அழைத்து வந்து மகளிர் உரிமை மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது திமுக மகளிர் அணி.

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி துணை சபாநாயகர் ராக்கி பிர்லா, காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சுஷ்மிதா தேவ், பீகார் மாநில அமைச்சர் லெஷி சிங், சிபிஐ தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளர் ஆனி ராஜா, சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த மாநாட்டில், பேசப்பட்ட விஷயங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை திகைப்புடன் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இம்மாநாடு மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஒருமுகப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மையப்படுத்தியே நடைபெற்றது. மத்தியில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் பாஜக, 2024 மக்களவை தேர்தலை மனதில் வைத்தே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வந்து சட்டமாக்கி இருக்கிறது என்பதே இந்த மேடையில் பேசிய அனைவரின் குரலாகவும் இருந்தது.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ’’சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திக் காட்டிய கனிமொழி, இப்போது இந்திய சங்கமத்தை நடத்திக் காட்டியுள்ளார். பாஜகவை தோற்கடிக்க வேண்டியது இந்தியாவிலுள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை. பாஜக ஆட்சியில் மகளிர் உரிமை மட்டுமின்றி அனைத்து மக்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி தேர்தல் கூட்டணி இல்லை. நாம் எந்த நிலையிலும் சமூகநீதியை விட்டுத்தரக்கூடாது’’ என்றார்.

சோனியா காந்தி தனது உரையில், ‘’நம்முடைய பெண்கள் இந்தியாவில் மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். மரபுவழி சமூகம், ஆணாதிக்க சமூகம், கலாசாரம் என்கிற களைகளை எல்லாம் தாண்டி மிக அருமையான சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நீண்டநெடிய போராட்டத்தில் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்துள்ளன.

ஆனால், இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய குடும்பத்தின் மைய தூண்களாக, நாட்டின் தலைவர்களாக பெண்கள் ஆற்றும் பணிகள் மகத்தானவை. இந்தப் போராட்டத்தில் பெண்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டும்” என்றார்.

கவிஞர் சல்மா
கவிஞர் சல்மா

மகளிர் உரிமை மாநாடு முழுவெற்றி அடைந்ததாக திமுகவும் கூட்டணித் தோழன் காங்கிரசும் கொண்டாடுகின்றன. ஆனால், இந்த மாநாடு குறித்து முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மவுனமாக இருந்தாலும் பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். “வாரிசு அரசியலின் உச்சம்” என்றும், “வாரிசுகள் ஒன்றுகூடி நாடகம் நடத்தியுள்ளனர்” என்றும் விமர்ச்சிக்கிறது பாஜக முகாம்.

இந்த விமர்சனங்கள் தொடர்பாக திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மாவிடம் பேசினோம். “பாஜகவில் யாரும் வாரிசு அரசியல் பண்ணாமல் உள்ளார்களா... வாரிசு அரசியல் செய்யலாம். ஆனால், மக்களை ஏமாற்றும் அரசியல்தான் செய்யக் கூடாது. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என தற்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாத ஒரு மசோதாவை தாக்கல் செய்து நாடகமாடுவது பாஜக; நாங்கள் அல்ல.

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் தான் காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. படிக்கும் ஆர்வமுள்ள பெண்களை கைதூக்கிவிட நிதி தந்து உதவுகிறது திமுக அரசு. ஆனால் பாஜக ஆட்சியில், ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றால் குற்றவாளி லிஸ்ட்டில் நிச்சயம் பாஜகக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் வாரிசு அரசியல் பற்றியோ பெண்கள் பற்றியோ பேச அருகதையற்றவர்கள்.

மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு மத்திய பாஜக ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை. இவற்றிற்கு பதிலளிக்க முடியாமல், மக்களை சந்திக்க தெம்பில்லாதவர்கள் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டே இருப்பார்கள். மக்களவைத் தேர்தலில் நிச்சயம் மக்கள் இவர்களுக்கு தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. திமுக நடத்திய மகளிர் உரிமை மாநாடு பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இவர்களின் புலம்பல்’’ என காட்டமாக பேசி முடித்தார்.

கார்த்தியாயினி
கார்த்தியாயினி

திமுகவின் இந்த குற்றச்சாட்டு குறித்து பாஜக மாநில செயலாளரும் வேலூர் முன்னாள் மேயருமான கார்த்தியாயினியிடம் பேசினோம். “மகளிர் உரிமை மாநாடா... அல்லது வாரிசு அரசியலின் காட்சியா? என மக்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு வாரிசுகள் ஒன்று சேர்ந்து கூடி கும்மி அடித்துள்ளார்கள்; அவ்வளவுதான்.

ராஜீவ் காந்தியின் மனைவி மற்றும் மகள், முப்தி முகமத் சயீத் சாப்பின் மகள், சரத் பவாரின் மகள், அகிலேஷ் யாதவின் மனைவி, சந்தோஷ் மோகன் தேவின் மகள், கருணாநிதியின் மகள் உள்ளிட்டோர் கருணாநிதியின் மகன் தலைமையில் அரசியல் குடும்ப அடையாளத்தைக் கொண்டவர்கள் மாநாடு என்ற போர்வையில் ஒன்றுகூடியிருக்கிறார்கள்.

ஆனால், பாஜக அப்படிக் கிடையாது தானாக சுயம்புவாக வளர்ந்தவர்களை கொண்டாடும் இயக்கம். உதாரணம், எங்களுடைய சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல... ஏசி ரூமில் வாழ்ந்தவர்கள்; வளர்ந்தவர்கள். வெயில் மழை என எதிலும் தலைக்காட்டாதவர்கள். இன்றைக்கு தேர்தல் நெருங்குகிறது என்றதும் வீதிக்கு ஓடிவந்துள்ளார்கள். நாங்கள் அப்படி கிடையாது வீதியிலேயே மக்களுக்காக நிற்பவர்கள். குறிப்பாக, பெண்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள்.

மணிப்பூர்... மணிப்பூர் என்று கூச்சலிடும் இவர்கள் இலங்கையில் தமிழ் சொந்தங்கள் கொன்றுகுவிக்கப்பட்ட போது எங்கே சென்றார்கள். அங்கும் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்; படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் வேடிக்கை பார்த்த இவர்களுக்கு, பெண்கள் உரிமைக்குறித்துப் பேச அருகதை கிடையாது.

சனாதனம் குறித்து பேசி அகில இந்திய அளவில் உதயநிதி பிரபலமாகிவிட்டார் என்ற ஆதங்கத்தில் தன்னை தேசிய அரசியலில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக வாரிசுகளைக் கூட்டி வந்து நாடகம் நடத்தியுள்ளார் கனிமொழி. அவ்வளவுதான்’’ என முடித்துக்கொண்டார் அவர்.

மகளிர் உரிமைத் தொகையின் முதல் மாத தவணையை குடும்பத் தலைவிகளுக்கு வழங்கிய சூட்டுடன் மகளிர் உரிமை மாநாட்டையும் நடத்தி முடித்திருக்கிறது திமுக. இரண்டுக்கும் என்ன பலன் கிடைக்கிறது என்பதை மக்களவைத் தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்!

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in