
சென்னையில் தொழிலதிபரை கடத்தி சென்று 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த திமுக பெண் கவுன்சிலர், அவரது கணவர் வட்டச் செயலாளர் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அமர்ராம்(53). இவர் சோழிங்கநல்லூரில் சொந்தமாக அடகுகடை நடத்தி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு மைலாப்பூரை சேர்ந்த திமுக வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் 60 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து நாவலூரில் உள்ள 58 சென்ட் நிலத்தை கிரையம் செய்வதற்கான பத்திரப்பதிவு செய்து, அதன்பின் 2018-ம் ஆண்டு கிரைய தொகை முழுவதையும் கொடுத்து பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த நிலம் பிரச்சினை தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் மனோகரன், கிருஷ்ணமூர்த்தி மீதும், அமர்ராம் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அது குறித்து அமர்ராம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் மனோகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி அமர்ராம் சென்னை மெரினா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு தெரிந்த வழக்கறிஞர் செந்தமிழ் என்பவர் கடந்த மாதம் 16-ம் தேதி நிலம் தொடர்பாக பேச வேண்டும் என மெரினா கடற்கரைக்கு அழைத்தனர். பின்னர் அவர் கூறியது போல் தனது இருசக்கர வாகனத்தில் மெரினா லைட் ஹவுஸ்க்கு சென்றேன். அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, எனது கண்களை கட்டி காரில் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடத்தி சென்றனர். ஏற்கெனவே அங்கு காத்திருந்த நிலத்தை விற்ற திமுக வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவியும் 124 வார்டு திமுக கவுன்சிலருமான விமலா உள்ளிட்ட 10 பேர் என்னை மிரட்டி அடித்து கத்தியால் கீரி அவர்களிடமிருந்து வாங்கிய 25 கோடி மதிப்புள்ள நாவலூர் நிலத்தை வெறும் 60 லட்சம் கொடுத்து கிரைய ஒப்பந்தம் ரத்து சான்றிதழில் கையெழுத்து பெற்று கொண்டு தன்னை காரில் இருந்து தள்ளிவிட்டு சென்ற கிருஷ்ணமூர்த்தி, விமலா, செந்தமிழ், மனோகரன் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், தொழிலதிபர் அமர்ராம் சில வருடங்களுக்கு முன்பு நாவலூர் ஏ.ஜி.எஸ் தியேட்டர் அருகே உள்ள 58 சென்ட் நிலத்தை 10 கோடி ரூபாய் கொடுத்து கிரையம் பெற்றதும், பின்னர் இந்த நிலம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் மனோகரன் இடையே பிரச்சினை ஏற்பட்டு மனோகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. தற்போது இந்த இடம் 25 கோடி ரூபாய்க்கு மேல் விலை போவதால் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சகோதரர் மனோகரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து இந்த நிலத்தை பில்டர்ஸ் ஒருவருக்கு விற்று பணத்தை பங்கு போட திட்டம் தீட்டியுள்ளனர். அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக நிலத்தின் பவர் ஆப் அட்டார்னியை பில்டர்ஸ் பெயருக்கு மாற்ற வேண்டி கிருஷ்ணமூர்த்தி தனது அடியாட்களை ஏவி அமர்ராமை கடத்தி சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து மிரட்டி கையெழுத்து பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அமர்ராமை பத்திரத்தில் கையெழுத்து போடவில்லை என்றால் குடும்பத்தை கொன்று விடுவோம் என கூறி வீடியோ கால் மூலமாக அவரது வீட்டின் அருகே இருந்து ரவுடிகள் மிரட்டியதும் தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றிய போலீஸார், திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி திமுக கவுன்சிலர் விமலா கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ், மனோகரன் உள்ளிட்ட10 பேர் மீது சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல், சிறை பிடித்து சொத்துக்களை அபகரித்தல், ஆள்கட்டத்தல், மிரட்டி பணம் பறிக்க காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் மெரினா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது எவ்வாறு பத்திரப்பதிவு நடைபெற்றது? என்பது குறித்து சார்பதிவாளர் அலுவலத்தில் போலீஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். நில அபகரிப்பில் ஈடுபட்ட திமுக வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் விமலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.