
டைம்ஸ் நவ் இடிஜி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, 2024 மக்களவைத் தேர்தலில் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி 30 - 34 (57.2 சதவீதம்) தொகுதிகளையும், அதிமுக-என்டிஏ கூட்டணி 27.8 சதவீத வாக்குகளுடன் 4 - 8 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திமுகவுக்கு 33.50 சதவீத வாக்குகளுடன் 20 - 24 தொகுதிகள் கிடைக்கும் என்றும், காங்கிரஸுக்கு 15.60 சதவீத வாக்குகளுடன் 9 - 11 தொகுதிகள் கிடைக்கும் என்றும், அதிமுகவுக்கு 17.30 சதவீத வாக்குகளுடன் 4 - 8 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 8.90 சதவீத வாக்குகளுடன் 0 - 1 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்ற கட்சிகள் 24.70 சதவீத வாக்குகளுடன் 0 - 2 இடங்களில் வெல்வார்கள் எனவும் சர்வே கூறுகிறது.
இந்த சர்வேயில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காது.
நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3 வது முறையாக இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுவார் என்று டைம்ஸ் நவ் இடிஜி நடத்திய சர்வே தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 160 முதல் 190 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 296 முதல் 326 இடங்களைப் பெறக்கூடும் என்று கணக்கெடுப்பின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த கருத்துக்கணிப்பின்படி இந்தி பேசும் வட மாநிலங்களில் பாஜக கூட்டணி வலுவுடன் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 62 முதல் 80 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 லட்சத்து 10 ஆயிரத்து 662 பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது, இதில் தொலைபேசி வாயிலாக 60% பேரிடமும், வீடு வீடாகச் சென்று 40 % பேரிடமும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. ஜூன் 15 முதல் ஆகஸ்டு 12 வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.