திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சி; தடுக்க முயன்ற அதிமுக, பாஜகவினர் மீது தாக்குதல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சாலை மறியல்
திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சி; தடுக்க முயன்ற அதிமுக, பாஜகவினர் மீது தாக்குதல்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சாலை மறியல்

சென்னை, வண்ணாரப்பேட்டை, 49-வது வார்டில் திமுகவினர் கள்ளஓட்டு போட முயற்சித்ததைத் தடுத்த அதிமுக, பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக, பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டை, 49-வது வார்டில் மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் இளையஅருணா, அதிமுக சார்பில் ஏடி.அரசு, பாஜக சார்பில் வன்னிய ராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை முதல் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்து வந்த நிலையில், மாலை 3.30 மணி அளவில் திமுக வேட்பாளர் இளையஅருணா தலைமையில் வந்த சிலர், 49-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் மெட்ரிகுலேஷ்ன் பள்ளி, அப்பாசாமி பள்ளி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டு போட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்து அங்குவந்த அதிமுக-பாஜகவினர், திமுகவினரை தட்டிக்கேட்டபோது கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திமுகவினர் அதிமுகவைச் சேர்ந்த ஜெகன், பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சிக் கழக நிர்வாகி ராமையா ஆகியோரை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்குவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வேட்பாளர் ஏடி.அரசு, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ராயபுரம் மனோ உட்பட 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், திமுகவினரின் செயலைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஜி.ஏ ரோட்டில் பாஜக வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலும் மறியல் நடைபெற்றது. போரட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் கள்ளஓட்டு போட முயன்று, தாக்குதல் நடத்திய திமுகவினரை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

காவல் துறை அதிகாரிகள் நேரில்வந்த பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.