டி.ஆர்.பாலு எம்.பிக்கு கலைஞர் விருது

டி.ஆர்.பாலு எம்.பிக்கு கலைஞர் விருது

செப்டம்பர் 15-ம் தேதியன்று விருதுநகரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெற இருப்பவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் ஆகிய மூன்றையும் நினைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதியன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா எதிர்வரும் 15-ம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு முப்பெரும் விழாவின் போதும் தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு திமுக சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்படும். பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பின், அவரது பெயரில் பேராசிரியர் விருதும், அதனைத் தொடர்ந்து. கருணாநிதி மறைவிற்குப் பின் அவரது பெயரில் கலைஞர் விருதும் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெற இருப்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா. மோகனுக்கும், கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பிக்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி. திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு இவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in