யோசனை இன்றி செயல்பட்டதா திமுக?- பெயர் அரசியலால் அதிருப்தியில் பிள்ளைமார் சமூகவாக்குகள்!

யோசனை இன்றி செயல்பட்டதா திமுக?- பெயர் அரசியலால் அதிருப்தியில் பிள்ளைமார் சமூகவாக்குகள்!

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மீண்டும் கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டவேண்டும் என்னும் கோரிக்கை ஒலித்துவந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு, ‘கலைஞர் அரங்கம்’ என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே திமுகவை விட்டுவிட்டு பாஜக பக்கம் நகர்ந்துவரும் பிள்ளைமார் சமூக (நாஞ்சில் வெள்ளாளர்) மக்களிடம் இது இன்னும் உஷ்ணத்தைப் பற்றவைக்க, சமூகவலைதளங்களில் இதுதொடர்பிலான பதிவுகள் குவிந்துவருகின்றன.

தலைவலி தந்த இட ஒதுக்கீடு!

குமரிமாவட்டத்தில் அதிகளவில் இருக்கும் நாஞ்சில் வெள்ளாளர் (பிள்ளை) சமூகம் பொதுப்பிரிவில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு, பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதனால் பொதுப்பிரிவினர் மத்தியில் பாஜகவின் இமேஜ்ம் உயர்ந்தது. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்தது. இது திமுக மீது, இச்சமூக மக்களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இருதொகுதிகளிலும் பிள்ளைமார் சமூகவாக்குகள் பரவலாக உள்ளன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும் கைப்பற்றிய, திமுக கூட்டணி கடந்த தேர்தலில் நாகர்கோவில், கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியைத் தழுவியது. அதிலும் திமுக இந்த இருதொகுதியிலும் தோற்றது. அதற்கு பாஜக கூட்டணியும், பிள்ளைமார் சமூக வாக்குகள் பத்து சதவீத இட ஒதுக்கீட்டினால் அதிமுக, பாஜக முகாம் நோக்கி நகர்ந்ததும் காரணம்.

இப்போது நாகர்கோவில் கலைவாணர் அரங்கத்தை முற்றாக இடித்துவிட்டு, அந்த இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கலைவாணர் அரங்கத்தை இடித்துக் கட்டப்பட்டது. இதனால் மீண்டும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரைச் சூட்டுவதுதான் முறை எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால் ‘கலைஞர் அரங்கம்’ எனப் பெயர்சூட்ட தீர்மானம் நிறைவேற்ற, ‘திமுக எப்போதுமே தங்களுக்கு எதிரான இயக்கம்’ என்பதுபோல் சமூக வலைதளங்களில் கலைவாணரின் சமூகத்தினரின் பதிவுகள் குவிகின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளாளர் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், “1969-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நாகர்கோவிலில் காவேரி தந்த கலைச்செல்வி என்னும் நிகழ்ச்சி நடத்தி, அதன்மூலம் 6 லட்ச ரூபாய் நிதிதிரட்டி உருவாக்கியது தான் கலைவாணர் கலையரங்கம். ‘நெல்லை எனக்கு எல்லை. குமரி எனக்குத் தொல்லை’ எனப் பேசியவர் கருணாநிதி. ஏற்கெனவே எங்கள் சமூகத்திற்கு வழங்கப்பட்ட பத்துசதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குப் போட்டது திமுக. இதோ இப்போது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பெயரில் இருந்த அரங்கத்தை இடித்து, புதுகட்டிடம் கட்டிவிட்டு கலைஞர் அரங்கம் எனப் பெயர் சூட்டிக்கொள்கிறது. அவர் பிறந்த ஊரில் அவரது பெயரை வைப்பதுதான் நியாயம். திரைப்படங்களின் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளை, மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பாடுபட்டவர் என்.எஸ்.கே. அவர் பெயரையே மீண்டும் சூட்டாவிட்டால் பிள்ளைமார் சங்கங்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

அனைத்து விசயங்களிலும் கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் என்னும் அவசர அரசியலில், வாக்குவங்கி இழப்பை திமுக யோசிக்க மறந்துவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in