பாராளுமன்ற டிவியை பாஜக டிவி ஆக்கிவிட்டார்கள்!

திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா எம்.பி பேட்டி
பாராளுமன்ற டிவியை பாஜக டிவி ஆக்கிவிட்டார்கள்!

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னொரு பக்கம் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லாததும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் திமுகவின் டெல்லி முகங்களில் ஒருவரான மூத்த தலைவர் திருச்சி சிவா எம்பியிடம் 'காமதேனு' இதழுக்காகப் பேசினோம். இனி பேட்டி...

குளிர்காலக் கூட்டத்தொடர் எப்படி நடந்து முடிந்திருப்பதாகக் கருதுகிறீர்கள்?

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை. விதிப்படி, பாய்ன்ட் ஆஃப் ஆர்டர் கேட்டால் அவைத் தலைவர் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. பாராளுமன்ற நடைமுறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது ரொம்ப ரொம்ப முக்கியமான பதவி. சட்டமன்றத்துடன் ஒப்பிடுகையில், நாடாளுமன்றத்தில் சில மரபுகள் இன்னும் மேன்மையாக இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது பேச எழுந்தால், உடனே அனுமதி தரப்படும். அவையும் அமைதியாகிவிடும். வேறு யாராவது பேசிக்கொண்டிருந்தால்கூட அப்படியே அமர்ந்துவிடுவார்கள். இதுதான் மரபு.

ஆனால், அண்மைக்காலமாக எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து சத்தம் போட்டு எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டால்கூட, அனுமதிப்பதில்லை. அவர் பேச ஆரம்பித்தால், பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். ஒலிபெருக்கி துண்டிக்கப்படுகிறது. நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவிக்களை ஒன்றாக்கி, சன்ஸத் டிவியாக்கிவிட்டார்கள். அது பாராளுமன்றத்தின் டிவிதானே ஒழிய, பாஜக டிவி அல்ல. ஆனால், அதையும் பாஜக டிவியாக மாற்றிவிட்டார்கள்.

எதிர்க்கட்சியின் பேச்சுகளை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, ஆளுங்கட்சியினரின் பேச்சை மட்டும் காட்டுவது, அரசுக்கு எதிராக எது நடந்தாலும் அதை இருட்டடிப்பு செய்வது என்று முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமாக அந்தத் தொலைக்காட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் இதுபோன்ற பல பிரச்சினைகளை ஆழமாகப் பார்ப்பதில்லை. டிவி ஒரு தலைபட்சமாக நடக்கிறது என்று நான் அவைத்தலைவரிடமே சொன்னேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை மரபுகளை மீறி நடந்துகொண்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறபோது, அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிவிட்டுச் சொல்லுங்கள். நாங்கள் தவறாக நடந்துகொண்டாமோ என்பதை எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களே பார்த்துத் தீர்மானிக்கட்டும் என்கிறோம்.

நீங்கள் பேச அனுமதிப்பதில்லை என்கிறீர்கள். ஆனால், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் 18.45 மணி நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்துவிட்டன என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?

அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை கிடையாது. நான் சொல்வதையும் கேட்டுக்கொள்ளுங்கள். அதில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இரண்டுக்கும் பங்கிருக்கிறது. மிக முக்கியமாக, 2019-ல் வேளாண் சட்டங்களை அவர்கள் நிறைவேற்றிய முறையே சரியில்லை. “அவசரப்படாதீங்க, இதில் நிறைய கோளாறு இருக்கிறது” என்று நான் உட்பட எத்தனையோ எம்பிக்கள் வலியுறுத்தினோம். எதையும் பொருட்படுத்தாமல், எல்லாவிதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு புல்டோஸ் பண்ணி மசோதாவை நிறைவேற்றினார்கள். விளைவாக ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகளின் கடுமையான போராட்டம், 800 விவசாயிகள் மரணம், பொருளாதார நலிவு, டெல்லி துண்டிக்கப்பட்டிருந்தது, லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகளைக் கொன்றது என்று எத்தனையோ நடந்துவிட்டது.

இத்தனையும் நடந்த பிறகு, தேர்தல் வருகிறது என்பதற்காக சத்தமே இல்லாமல், அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுகிறார்கள். திரும்பப் பெறும்போதாவது, ஒரு விவாதத்துக்குப் பிறகு திரும்பப் பெறுங்கள் என்று சொன்னால் அதையும் அவர்கள் ஏற்கவில்லை. விவாதமே தேவையில்லை என்று வெறும் 2 நிமிடத்தில் திரும்பப்பெற்றார்கள். இதை எதிர்த்து நாங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதில் அர்த்தமே இல்லை. மிருகபலம் கொண்ட ஆளுங்கட்சிக்கு நாங்கள் பயந்துபோய்விட்டோம் என்றாகிவிடாதா? முந்தைய காலங்களில் பாஜக பண்ணாததையா நாங்கள் பண்ணிவிட்டோம்? இதுவும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான். இதை நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது அவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறியிருப்பதுடன், பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எண்ணிக்கையும் 34 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால், திமுக உறுப்பினர்களை பிற மாநிலத்தவர்கள் பார்க்கும் பார்வையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

மத்தியிலும் சரி... மாநிலத்திலும் சரி... திமுக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எல்லா கட்டங்களிலும் நான் எம்பியாக இருந்திருக்கிறேன். திமுக என்றாலே, நாடாளுமன்றத்தில் எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. இரண்டு அவைகளிலும் சேர்த்து வெறும் 3, 4 பேர் மட்டுமே உறுப்பினராக இருந்த காலத்திலும் திமுகவுக்கென்று தனி மரியாதை உண்டு. அதற்குக் காரணம், நாங்கள் நடந்துகொள்ளும் முறை, விவாதங்களில் பங்கேற்கிறபோது எடுத்துவைக்கிற வாதங்கள், சரியான நிலைப்பாடுதான்.

எண்ணிக்கையைப் பொறுத்தோ, ஆளுங்கட்சியாக இருக்கிறோம் என்பதாலேயோ எங்களது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளவும் இல்லை, மற்றவர்கள் எங்களைப் பார்க்கிற பார்வை மாறுகிறபடியான வாய்ப்புகளை நாங்கள் தந்ததுமில்லை. எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்போம். இந்த மாதிரியான மரபை திமுக, அண்ணா காலத்தில் இருந்தே கடைபிடித்துவருகிறது.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு என்ன?

எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், இந்த மசோதா அவசர கதியில் நிறைவேற்றப்படக் கூடியது அல்ல. நிலைக்குழுவுக்கு அனுப்பி விவாதித்து, தொடர்புடைய மாநிலங்களுடன் பேசி, நிறைகுறைகளை எல்லாம் வைத்து முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அந்த மசோதா நிறைவேற்றப்படும்போது எங்களுடைய கருத்தை இன்னும் விரிவாகச் சொல்வோம்.

டெல்லியில் திமுக அலுவலகம் கட்டுகிற பணி எந்த நிலையில் இருக்கிறது? அதன் முக்கியத்துவம் என்ன?

1957-ல் இருந்து டெல்லியில் திமுக ஒரு கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு சட்ட, திட்டங்களை நிறைவேற்றியதில், வடிவமைத்ததில் அதற்கும் பங்கிருக்கிறது. அதற்கு டெல்லியிலும் ஓர் அலுவலகம் வேண்டும் என்று நினைத்தோம். அது எங்களுடைய தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன் கட்டப்பட்டிருக்கிறது. கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. அது திறக்கப்பட்ட பிறகு அதன் செயல்பாடுகள் என்னவென்பது உங்களுக்குத் தெரியும்.

கடந்த 10 ஆண்டுகளில் ராகுல் காந்தியின் செயல்பாடுகளில் முன்னேற்றம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீங்கள் இன்றில்லை, நானும் வேறாகியிருக்கிறேன். யாராக இருந்தாலும் 10 ஆண்டுகளில் வளரத்தானே செய்வார்கள். நாட்பட நாட்பட வயது, அனுபவம், செயல்பாடு, முதிர்ச்சி, அணுகுமுறை என்று எல்லாவற்றிலும் எல்லோருக்குமே முன்னேற்றம் இருக்கும். அது ராகுல் காந்தியிடமும் இருப்பதைப் பார்க்கிறேன்.

மோடியின் செல்வாக்கு சரிவதாகச் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ எதிர்க்கட்சிகளுக்குத்தான் செல்வாக்கில்லை என்கிறார்கள். உங்களுடைய பார்வை என்ன?

பாஜக அரசு செய்வது எல்லாமே ஜனநாயகத்துக்கு விரோதமாக, இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராகவே இருக்கிறது. நீங்களும் நானும் ஒரே மாதிரி உடுத்த வேண்டும், ஒரே மொழியில் பேச வேண்டும், ஒரே உணவை உண்ண வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், நாம் ஒன்றாக இருப்போம் என்பதுதான் இந்தியாவின் தத்துவம். என்னுடைய உணவைத் தான் நீயும் சாப்பிட வேண்டும், என்னுடைய மொழியைத்தான் நீயும் பேச வேண்டும் என்று சொல்வது தனி மனிதர்களுக்குள்ளேயே சாத்தியமில்லை என்கிறபோது இவ்வளவு பெரிய நாட்டில் அதெப்படி சாத்தியம்? இதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

தேர்தல் நெருக்கத்தில் இதை இந்த நாட்டு மக்களுக்கு முழுமையாகப் புரியவைத்து, இந்த ஆட்சியை எங்களால் வீழ்த்த முடியும். இப்போது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை அது இது என்று என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். எந்தக் கட்சிக்கும் இங்கே நிரந்தரமான பலம் கிடையாது. மக்கள் தருகிற பலம்தான் அந்தக் கட்சியின் பலம். எங்களுக்கு அந்த ஆதரவு பெருகிவருகிறது. எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்படும். இந்திய அரசமைப்புச் சட்டமும், கூட்டாட்சித் தத்துவமும் பாதுகாக்கப்படும். பலமிக்க அரசாங்கம் நினைத்ததை எல்லாம் செய்துவிட முடியும் என்ற தோற்றம் இருக்கலாமே தவிர, மக்களுக்கு விரோதமாக அது செயல்பட்டால் அதன் அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும் என்பதை வருங்காலம் உணர்த்தும்.

நீங்கள் திமுக மாணவரணி செயலாளராக இருந்த காலத்தில், பல கல்லூரிகளுக்கு நேரில் வந்தீர்கள். இன்று திமுகவின் மாணவரணி அப்படிச் செயல்படுவது போல் தெரியவில்லை. ஆனால், எல்லாக் கல்லூரிகளிலும் பாஜகவின் மாணவரணி உருவாகி வருகிறதே?

திமுகவில் இளைஞரணி, மாணவரணி என்று இரண்டு அமைப்புகள் இருக்கிறது. திமுக இளைஞரணி போன்ற பலமான அமைப்பு இந்தியாவில் எந்தக் கட்சியிலும் கிடையாது. குக்கிராமம் வரையில் அந்த அமைப்பு வலுவாக இருக்கிறது. அது தொடங்கப்பட்ட காலத்தில் தளபதி ஸ்டாலினுடன் நானும் இருந்தேன். இப்போது தம்பி உதயநிதி அதே வேகத்துடன் இளைஞரணியை முன்னெடுத்துச் செல்கிறார்.

மாணவரணி என்பது கல்லூரிகளில் இருக்க வேண்டியது. இப்போது தனியார் கல்லூரிகள் அதிகரித்துவிட்டன, கட்டுப்பாடுகள் கடுமையாகியிருக்கின்றன. மாணவர்கள் சுதந்திரமாக அரசியல் பேச முடியாது. மாணவர் பேரவைத் தேர்தல்களும் நடத்தப்படுவதில்லை. காலமாற்றம் வேறு. சுதந்திரப் போராட்ட காலத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் இருந்த உணர்வு இன்றைய மாணவர்களிடம் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியாதோ, அப்படித்தான் இதுவும். காலமாற்றத்துக்கு ஏற்ப மாணவர்களின் அணுகுமுறையும், செயல்பாடும் மாறுவதைப்போல மாணவரணியின் செயல்பாடும் அதற்கேற்ப மாறுவது இயல்புதானே?

மாநிலங்களவையில் புதிதாகப் பதவியேற்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், “வெல்க உதயநிதி ஸ்டாலின்” என்று கோஷமிட்டது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே?

புதிய எம்பிக்கள் தங்கள் தலைவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்வது வழக்கம்தான். எல்லோரும் உரையின்போது நன்றி சொல்வார்கள். அவர் பதவியேற்பின்போது சொல்லியிருக்கிறார். இருந்தாலும் நாங்கள் சொல்லியிருக்கிறோம், பேசும்போது நன்றி சொல்லுங்க, அதில் ஒன்றும் தவறில்லை என்று.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in