கம்பத்தில் திக்குமுக்காடும் திமுக!

முஸ்லிம்களை புறக்கணிப்பதாக கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக குற்றச்சாட்டு
கம்பத்தில் திக்குமுக்காடும் திமுக!
கம்பம் ராமகிருஷ்ணன்

கம்பம் நகர்மன்ற தேர்தலில் தனது சாதியைச் சேர்ந்தவர் வெற்றி பெறுவதற்காக தங்களைப் புறக்கணித்துவிட்டதாக திமுக எம்எல்ஏ-வான கம்பம் ராமகிருஷ்ணன் மீது முஸ்லிம் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இரண்டாக பிரிக்கப்பட்ட தேனி மாவட்ட திமுகவில் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணனும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்கதமிழ்செல்வனும் நியமிக்கப்பட்டனர்.

இதில், கம்பம் ராமகிருஷ்ணன், சுயசாதி அடையாளத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டும் முஸ்லிம்கள், நகர்மன்றத் தேர்தலில் தங்களை அவர் புறக்கணித்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். என்ன தான் நடந்து கம்பம் நகர்மன்றத் தேர்தலில்?

நிர்வாக வசதிக்காக கம்பம் நகர் திமுக இரண்டாக பிரிக்கப்பட்ட போது தனது சாதிக்காரரும் மாற்றுகட்சியில் இருந்து வந்தவருமான செல்வக்குமாரை தெற்கு நகர் செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமித்தார். வடக்கு நகர் செயலாளராக துரை நெப்போலியன் நியமிக்கப்பட்டார்.

33 வார்டுகள் கொண்ட கம்பம் நகராட்சியில் இந்தத் தேர்தலில் திமுக 24, அதிமுக 7, காங்கிரஸ் 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்தில் வெற்றிபெற்றன. இதையடுத்து நகராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுகவில் பலத்த போட்டி நிலவியது. கம்பம் ராமகிருஷ்ணன் செல்வக்குமாரின் மனைவி சுனோதாவையும், துரை நெப்போலியன் தனது மனைவி வனிதாவையும், தங்கதமிழ்செல்வனுடன் திமுகவில் ஐக்கியமான வீரபாண்டி தனது மனைவி சுந்தரியையும் தலைவராக்க மோதிக்கொண்டனர். கடைசியில், வனிதாவுக்கே வாய்ப்பளித்தது கட்சித் தலைமை.

துரை நெப்போலியன் மற்றும் அவரது மனைவி வனிதா, செல்வக்குமார் மற்றும் அவரது மனைவி சுனோதா,
துரை நெப்போலியன் மற்றும் அவரது மனைவி வனிதா, செல்வக்குமார் மற்றும் அவரது மனைவி சுனோதா,

தலைவர் பதவியை தவறவிட்ட கம்பம் ராமகிருஷ்ணன், சுனோதாவுக்கு துணைத்தலைவர் பதவியையாவது பெற்றத்தர முடிவு செய்தார். வீரபாண்டியும் தனது மனைவியை துணைத்தலைவராக்க முயற்சி செய்தார். இதற்கிடையில், துணைத்தலைவர் பதவியை தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் தரப்பிலும் கோரிக்கை விடுத்தனர்.

கம்பம் நகராட்சியில் திமுக சார்பில் 6 முஸ்லிம்களும், அதிமுக சார்பில் 1 முஸ்லிமும் கவுன்சிலர்களாக இருக்கிறார்கள். இதில் திமுக சார்பில் 11-வது வார்டில் போட்டியிட்டு மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சாதிக்கிற்கு துணைத்தலைவர் பதவி தரப்பட வேண்டும் என்று திமுகவிடம் முஸ்லிம்கள் கோரிக்கை வைத்தனர்.

சுனோதா, செல்வக்குமார்.
சுனோதா, செல்வக்குமார்.

ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் தான் நினைத்தபடியே தனது ஆதரவாளரான செல்வக்குமார் மனைவி சுனோதாவை துணைத்தலைவராக்கி விட்டார் கம்பம் ராமகிருஷ்ணன். இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கம்பம் நகர முஸ்லிம்கள் தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “இதற்கு முந்தைய உள்ளாட்சித் தேர்தலில் கம்பத்தில் அதிமுக வெற்றி பெற்றபோது துணைத்தலைவராக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அபுதாஹீரைத்தான் தேர்வு செய்தது. ஆனால், சிறுபான்மை மக்களின் தோழன் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, அதற்கு நேர்மாறாக நடந்திருப்பது வேதனையாக உள்ளது. இப்படி எங்களை புறக்கணித்துவிட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கம்பம் ராமகிருஷ்ணன் தனக்காக எப்படி எங்கள் சமுதாய மக்கள் மத்தியில் ஓட்டுக் கேட்பார் என்று தெரியவில்லை” என்றனர்.

இதனிடையே, திமுகவும், கம்பம் ராமகிருஷ்ணனும் தங்களைப் புறக்கணித்து விட்டதாக சமூக வலைதளங்களில் முஸ்லிம் அமைப்பினர் தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் கம்பம் திமுக திக்குமுக்காடி வருகிறது.

Related Stories

No stories found.