காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும்: காரணம் கூறும் பாஜக!

 நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி
Updated on
1 min read

காவிரி பிரச்சினையில் தொடர்ந்து தமிழர்களை வஞ்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டுமென தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தமிழகத்தின் அனுமதியில்லாமல், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவும் இல்லாமல் மேகேதாட்டுவில் அணைக்கட்ட முடியாது. ஆனால் காங்கிரஸ் கட்சி திமுக, விசிக, கம்யூனிஸ்ட்களின் துணையோடு மிகப்பெரிய சதியை செய்து வருகிறது.

சட்டத்தை மீறி மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் அரசு எடுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. மத்திய பாஜக அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் தமிழர்களுக்கு செய்யும் துரோகச் செயல். இதற்கு திமுக துணைப் போகிறது.

பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அப்படி அவர் சென்றால் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என கூறினோம். காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகள் கட்ட அனுமதித்தது திமுக அரசுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பொங்கி வரும் காவிரியை அணைப்போட்டு தடுக்க நினைக்கிறது காங்கிரஸ். அதற்கு திமுக துணைப் போகிறது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாவட்டங்களில் கருப்புச் சட்டை அணிந்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். திமுக அரசு இனியாவது தங்களது நிலைப்பாட்டை மாற்றி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in