அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் திமுக

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதால் அதிரடி நோட்டீஸ்
அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் திமுக

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில், "திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள். முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது.

முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது. இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்டஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தமிழக வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார். தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக செயலாற்றி வரும் மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பொய் கருத்துக்களை பரப்பி வருகிறார். அரசுப் பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை, பிரதமர் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தையும் சொந்த முதலீடு செய்வதற்கான பயணம் என்றுதான் கூறுவாரா. முதல்வர் மு.க.ஸ்டாலினை இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் தி.மு.க சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது" என்று எச்சரித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in