நான்காம் ஆண்டில் திமுக ஆட்சி; மு.க.ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி. இந்த ஆண்டு திமுகவுக்கு மிக முக்கியமானது. ஏனென்றால், 2026-ல் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த ஆண்டிலிருந்தே ஆட்சியை தக்கவைப்பதற்கான அடித்தளத்தை கட்டமைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திமுக அரசு.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இருந்த போதும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக மாவட்ட வாரியாக களையெடுப்பு உள்ளிட்ட கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளையும் திமுக எடுக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன.

பிரச்சாரம் நிறைவு கூட்டத்தில் ஸ்டாலின்
பிரச்சாரம் நிறைவு கூட்டத்தில் ஸ்டாலின்

தேர்தலில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்று முன்பே எச்சரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பலர் மீது நடவடிக்கை பாயலாம் என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.

எனவே, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கட்சிக்குள் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். மக்களவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அதற்குப் பரிசாக அவர் துணை முதல்வர் ஆக்கப்படலாம் என்ற செய்திகளும் சிறகடிக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு நகர்ந்தால் கட்சியிலும் கணிசமான அளவுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்கிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலமாகவே கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடியும் என கணக்குப் போடுகிறது திமுக.

அதேசமயம், தேர்தல் நெருக்கத்தில் கட்சி அமைப்புக்குள் மாற்றம் செய்வதால் சறுக்கலை உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது. அதற்காக, செயல்படாத நிர்வாகிகளை சகித்துக் கொண்டால் அது அடுத்து வரும் தேர்தலிலும் கட்சிக்கு பாதிப்பை உண்டாக்கும். எனவே, இந்த விவகாரத்தை ஸ்டாலின் எப்படி லாகவமாக கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கட்சியைப் போலவே ஆட்சி நிர்வாகத்திலும் முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என்கிறார்கள் விஷயமறிந்த வட்டாரத்தினர். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்டவற்றை திமுக தனது ஆட்சியின் சாதனைகளாக சொன்னாலும் தாலிக்குத் தங்கம், மகளிருக்கான ஸ்கூட்டர் மானியம் போன்ற திட்டங்களை திமுக அரசு கைவிட்டதை மக்கள் ஏற்கத் தயாராய் இல்லை. இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பல இடங்களில் பெண்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மாதா மாதம் மின் கணக்கீடு, பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது. அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை உண்டாக்கும் மேகேதாட்டு அணை விவகாரத்திலும் திமுக அரசு சரியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதேபோல விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் திமுக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரமிது.

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

ஒரு ஆட்சியின் நான்காம் ஆண்டு தொடக்கம் என்பது முக்கியமான காலகட்டம். ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் இந்த ஆண்டில் செய்துமுடித்துவிடவேண்டும். ஏனென்றால் 5-ம் ஆண்டில் அடிபதித்ததுமே தேர்தல் பரபரப்புகள் படர ஆரம்பித்துவிடும். இதை மனதில் வைத்து, சொல்லியும் செய்யாமல் வைத்திருக்கும் திட்டங்களையும் சொல்லாமலே செய்து முடிக்க வேண்டிய திட்டங்களையும் செய்துமுடிக்க திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு.

திமுக ஆட்சிக்கு எதிராக குடும்ப அரசியல் குற்றச்சாட்டு, போதைப் பொருள் விவகாரம், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் என பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலேயே இந்த விவகாரங்களை பேசுபொருளாக்கின எதிர்க்கட்சிகள். எனவே, இனிவரும் மாதங்களில் எதிர்க்கட்சிகளின் இந்த பிரச்சாரத்தை தவிடுபொடியாக்கும் வியூகங்களையும் திமுக வகுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் களத்தில் தொடக்கத்தில் திமுகவுக்கு இருந்த தெம்பு கடைசி கட்டத்தில் இல்லாமல் போனது. சில தொகுதிகளில் திமுக அணி பெரும் போட்டியை சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது. அதற்குக் காரணம், எதிர்க் கட்சிகளின் பலம் இல்லை; ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப் திகள் தான். நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் திமுக அரசு இதையெல்லாம் எச்சரிக்கை சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு அடுத்து வரும் மாதங்களில் அதிருப்திகளை களைவதற்கான காரியங்களை முன்னெடுத்தால் ஆட்சியை தக்கவைக்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in