நாமக்கல்லில் களைகட்டிய நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு!

நாமக்கல்லில் களைகட்டிய நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு!

'உள்ளாட்சி நல்லாட்சி' என்ற தலைப்பிலான நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்கைக்குட்டைமேடு என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சி, 159 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்ற சுமார் 12 ஆயிரம் வார்டு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். திமுக அல்லாத திராவிட சித்தாந்தம் கொண்ட பேச்சாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய சுப.வீரபாண்டியன், “படிப்புதான் நம்மை உயர்த்தும். படிக்காமல் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்று சிலர் சொல்லலாம். அதை நம்பி படிக்காமலிருந்துவிடாதீர்கள். காமராஜரும், கருணாநிதியும் கூட படிக்காதவர்கள்தான். படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்று கண்ணதாசன் சொல்லி இருக்கிறார். அப்படி எங்கோ சிலரை உதாரணம் காட்டினால், படித்து முன்னுக்கு வந்த பத்து லட்சம் பேரை நம்மால் காட்டமுடியும். கல்விதான் சமத்துவத்தைக் கொண்டுவரும். ஆனால், இப்போது இருக்கும் கல்வி அறிவை வளர்க்கிறதா என எனக்குச் சந்தேகம் எழுகிறது. கம்ப்யூட்டரில் ஜோசியம் பார்க்கிறார்கள். யானை பிச்சை எடுக்கிறது. உண்மையான படிப்பு மூடநம்பிக்கைகளைக்களையும். சமத்துவத்தையும் கொண்டு வரும் ” என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “திராவிட ஆட்சி தொடங்கிய காலங்களில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சமூக நீதியை அண்ணா அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் தரமான கல்வியை கொடுத்து கருணாநிதி அதைச் செம்மைப்படுத்தினார். தற்போது உயர்கல்வியில் புதுமையைப் புகுத்தி திராவிட மாடல் ஆட்சியைச் சிறப்பாகக் கொடுக்கிறார் ஸ்டாலின் ” என்றார். இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசிவருகின்றனர். இந்த நிகழ்வில் இறுதியில் ஸ்டாலின் உரையாற்ற இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in