
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதிலிருந்தே கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாட திட்டமிட்டுள்ள திமுக அதற்கான முதல்கட்டமாக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 22-ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மார்ச் 22-ம் தேதியும், ஒருநாள் முன்னதாக திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மார்ச் 21 மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலத்திற்குச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்க வேண்டிய வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. தங்கள் அன்புக்குரிய தலைவரின் பிறந்த நாளை கொண்டாட திமுக தொண்டர்கள் ஆர்வமாக தயாராகி வருகின்றர்.