‘எங்கள தாண்டி தமிழ்நாட்ட தொட்ரா பார்க்கலாம்’ - பாஜகவை வம்புக்கு இழுக்கும் திமுக!

‘எங்கள தாண்டி தமிழ்நாட்ட தொட்ரா பார்க்கலாம்’ - பாஜகவை வம்புக்கு இழுக்கும் திமுக!

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜகவை விமர்சிக்கும் விதமாகக் கோவை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட திமுக போஸ்டர்கள் கோவை அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கின்றன.

கோவையில் பாஜக-திமுக போஸ்டர் யுத்தம் கடந்த சில மாதங்களாகவே வலுத்து வருகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை நள்ளிரவில் பாஜகவினர் கிழித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அதுபோல் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாஜகவினரும், பாஜகவை விமர்சித்து திமுகவினரும் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி அரசியல் செய்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக பாஜகவை வம்புக்கு இழுக்கும் விதமாக திமுகவினர் மீண்டும் கோவை முழுவதும் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள்.

பெரியார் பிறந்த நாள் விழா சமூக நீதிக்கான நாளாக கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பெரியார் பிறந்தநாளைத் தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி ,ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன் ‘எங்கள தாண்டி தமிழ்நாட்ட தொட்ரா பார்க்கலாம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே வேளையில், பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ‘உலகம் உற்று நோக்கும் தேசிய மாடல் தலைவரே’, ‘குடும்ப அரசியல் திராவிட மாடல்... ஜனநாயக அரசியல் தேசிய மாடல்’  போன்ற வாக்கியங்களுடன் பாஜக சார்பிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பாஜகவினரின் போஸ்டர்கள் சில இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளன. கோவையில் தொடரும் போஸ்டர் யுத்தம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in