உளவுத்துறை சொன்ன தகவல்... அண்ணாமலை, அன்புமணிக்கு குறிவைக்கும் திமுக!

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அன்புமணி
அன்புமணி

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளன. பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு அங்குள்ள கட்சிகளிடம் கூட்டணியை ஏற்படுத்தி தனது தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைத்து வருகிறது. தங்களிடமிருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் ஒன்று சேர்க்கும் வேலையில் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

அதேபோல காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில்  உள்ள மாநில கட்சிகளிடம் உடன்பாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை  இறுதி செய்துள்ளது. ஆனாலும்  காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்வதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. அதற்குக் காரணம் உளவுத்துறை மூலம் திமுக எடுத்து வைத்திருக்கும் சர்வே முடிவுகள் என்று கூறப்படுகிறது.

முன்பு கூட்டணிக்கு கொடுக்கப்பட்ட சில தொகுதிகளை இப்போதும் கொடுத்தால்  அந்த இடங்களில் எதிர்த்து நிற்கும் கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக திமுகவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.  அதனால் அப்படிப்பட்டத் தொகுதிகளை  மாற்றித் தரவும், அங்கெல்லாம் திமுகவே போட்டியிடுவதுமான  முடிவில் திமுக இருக்கிறது.  அத்துடன் திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து களமாடிவரும் பாஜக தலைவர் அண்ணாமலை,  பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தலில் நின்றால்  அவர்களை தோற்கடிக்க பிரத்யேகமாக திட்டத்தையும் திமுக தீட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் எந்த  தொகுதிகளில் போட்டியிடுகிறார்களோ அங்கு திமுகவிலிருந்து நேரடியாக பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்துவது என்று திமுக முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும்  கோவை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்க திமுக இதுவரை முன்வரவில்லை.  அங்கு அண்ணாமலை போட்டியிடாத பட்சத்தில் கூட்டணிக் கட்சிக்கு கொடுப்பதில் திமுகவுக்கு எந்த தயக்கமும் இல்லை.  ஒருவேளை அங்கு அண்ணாமலை நிறுத்தப்பட்டால் அவரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திமுக திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது. அதனால்தான் கோவையை கேட்ட கமலுக்கும்  அத்தொகுதி வழங்கப்படவில்லை.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அதேபோல தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக பெரும்வெற்றி பெற்றபோதும், அங்கு  பாஜக கூட்டணியில் அன்புமணி வெற்றி பெற்றார்.  தற்போது அங்கு  திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினராக செந்தில்குமார் தான் இருக்கிறார் என்றாலும் அவர் பல நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறார். அவரது பேச்சும், செயலும் திமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இந்த முறை அங்கு செந்தில்குமாருக்குப் பதிலாக வேறு வேட்பாளரை  களம் இறக்க திமுக திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் 

அன்புமணியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அவர் பாஜக கூட்டணியில் அங்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்  அவரை எதிர்த்து பலமான வேட்பாளரை களமிறக்க  திமுக திட்டமிட்டுள்ளது. இப்படி பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களை திமுக குறி வைத்துள்ளதால் அந்த தொகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in