திமுக உட்கட்சி தேர்தல்: பதவிகளை வாரிச்சுருட்டிய வாரிசுகள்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

வெற்றிகரமாக மாவட்ட கழக செயலாளர்கள் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது திமுக. ஆளும் கட்சியாக இருப்பதாலோ என்னவோ இம்முறை உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதுமே உரிமைப் போராகவே நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், அதையும் கடந்து பல இடங்களில் வாரிசுகளுக்கு வழிபோட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் தேர்தலில்.

கருணாநிதியின் குடும்பமே சாட்சியாக இருப்பதால் வாரிசு அரசியல் விமர்சனம் ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல. ஆனால், கருணாநிதியின் மகனாகவே இருந்தாலும் மிசா கொடுமைகளை அனுபவித்தது தொட்டு கடுமையாக உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் ஸ்டாலின். ஆகவே, அவரை வாரிசு அரசியல் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது. அவரைத் தொட்டு அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட கனிமொழியும் கட்டம் கட்டமாக உயர்ந்தே இந்த இடத்தில் நிற்கிறார். ஆனால், உதயநிதியை அப்படிச் சொல்லிவிடமுடியாது. ஸ்டாலின் மகன் என்பதாலேயே அவர் திமுக இளைஞரணிக்குச் செயலாளர் ஆக்கப்பட்டவர்.

வருங்காலம் உதயநிதி காலமாகத்தான் இருக்கும் என்பதால் திமுக பெருந்தலைகள் பலரும் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு காயநகர்த்தி தங்களது வாரிசுகளை முக்கிய இடங்களில் உட்காரவைத்துவிட்டார்கள்.

பொன்முடி
பொன்முடி

அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி தற்போது திமுக எம்பி-யாக இருக்கிறார். மகனை கட்சியின் முக்கிய பதவியிலும் அமர்த்தி அழகுபார்க்க நினைத்த பொன்முடி, அதன்படியே அவரை தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கிவிட்டார். இப்போதே அப்பாவின் வேலைகளை இழுத்துப் போட்டுக் கவனிக்கும் கௌதம சிகாமணி, இனி அனைத்திலும் முன்னைக் காட்டிலும் வேகமாக காரியமாற்றுவார்.

குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியைத் தக்கவைத்திருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிராக அவரது மாவட்டத்தில் திமுகவில் வலுவான எதிர்கோஷ்டி உருவானது. குழித்துறை நகரத் தலைவர் ஆசைத்தம்பி, திருவட்டாறு ஒன்றியத் தலைவர் ஜெகன்னாதன் என பெரும்படையே எதிர்த்து நின்றபோதும், உட்கட்சித் தேர்தலில் தானும் மாவட்ட செயலாளராகி தனது மகன் ரிமோனையும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கிவிட்டார் மனோ தங்கராஜ். கட்சிப் பொறுப்பில் இல்லாமலேயே மாவட்ட திமுகவை தனது கைக்குள் வைத்திருந்த ரிமோன், இனி ரிமோட் கண்ட்ரோலில் கட்சியினரை இயக்குவார் என்கிறார்கள்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்ட திமுகவில் என்.பெரியசாமியின் குடும்பத்தின் ஆதிக்கம் என்றைக்கும் உண்டு. இப்போது பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் அமைச்சராகவும், மகன் ஜெகன் தூத்துக்குடி மேயராகவும் இருக்கிறார்கள். இதுவரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த கீதா ஜீவன் இப்போது மாவட்ட செயலாளர் ஆகி இருக்கிறார். சகோதரர் ஜெகன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகி இருக்கிறார்.

ஆவுடையப்பன்
ஆவுடையப்பன்

நெல்லை திமுகவில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மீது திமுக தலைமைக்கு கரும் அதிருப்தி இருந்தது. அம்பாசமுத்திரம் தொகுதியில் தொடர்ந்து இருமுறை தோற்ற இவருக்கு தொகுதிக்குள் பழைய செல்வாக்கு இல்லை என்பதே காரணம். ஆனாலும் அறிவாலய வாசலில் தவம் கிடந்து நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியை தக்கவைத்திருக்கிறார் ஆவுடையப்பன். கூடவே தனது மகன் பிரபாகரனுக்கும் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியை மீண்டும் உறுதி செய்திருக்கிறார். இந்த முறை ஆவுடையப்பனை மாற்றி விடுவார்கள் என நம்பிக்கொண்டிருந்த நெல்லை கிழக்கு மாவட்ட திமுகவினர், “அப்பாவையும் பிள்ளையும் விட்டால் மாவட்டத்தில் கட்சிக்காரன் வேற யாருமே இல்லையா?” என சத்தமாகவே முனுமுனுக்கிறார்கள்.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

திண்டுக்கல் திமுகவில் அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார். அவரது மகன் செந்தில்குமார் பழநி தொகுதி எம்எல்ஏ. அத்துடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்த செந்தில்குமார் மீண்டும் அந்தப் பதவியை தக்கவைத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ஈரோடு திமுகவை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி. ஆக்டீவாக இருந்தபோதே தனது மகன் என்.கே.கே.பி.ராஜாவை அரசியலுக்கு அழைத்து வந்து, முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சரும் ஆக்கினார். ஆனால் ராஜா, தனது அதிரடிகளால் அமைச்சர் பதவியை இழந்தார். அந்த அதிருப்தியிலேயே ராஜா வசம் இருந்த ஈரோடு மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்தது திமுக தலைமை.

இதில் அப்செட்டான ராஜா, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் பதவி தராவிட்டால் தனக்கு மாவட்ட செயலாளர் பதவியே வேண்டாம் என்று சொல்லி தனது ஆதரவாளர் நல்லசிவத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ஆக்கினார். நல்லசிவம் இப்போதும் மாவட்ட செயலாளர் பதவியைத் தக்கவைத்துள்ளார். ஆனால், ராஜாவை அவர் கை கழுவி ஆண்டுகள் ஆகிறது.

கதிரவன்
கதிரவன்

வேளாண்மைத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது மகன் கதிரவனை மாவட்டப் பொருளாளர் பதவிக்கே கொண்டுவந்து விட்டார். கதிரவன் கட்சிப்பதவியில் இல்லாவிட்டாலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தந்தைக்காக முழு மூச்சில் வேலைசெய்தார். அதற்குப் பரிசாக மகனை பொருளாளர் ஆக்கி இருக்கிறார் பன்னீர்செல்வம். அடுத்து தம்பி கதிரவன் தான் கடலூர் எம்பி என இப்போதே பந்தா காட்ட ஆரம்பித்து விட்டார்கள் பன்னீரின் விசுவாசிகள்.

மற்ற மாவட்டங்களில் வாரிசுகளை பொறுப்புக்கு கொண்டுவர அப்பாக்கள் அரும்பாடு பட்டிருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கதை கொஞ்சம் உல்டா. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த ராஜேஸ்குமார் மாவட்ட செயலாளர் ஆகியுள்ளார். இவரது தீவிர ஆதரவாளர் அமைச்சர் மதிவேந்தன். மதிவேந்தனை அரசியலுக்கு அழைந்து வந்தது அவரது தந்தை மருத்துவர் இரா.மாயவன். தான் அமைச்சராகி விட்டாலும் தனது தந்தையையும் ஏதாவதொரு பதவியில் உட்காரவைக்க வேண்டும் என நினைத்தார் மதிவேந்தன். இந்தத் தேர்தலில் அது கைகூடிவிட்டது. ஆம், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலிருந்து தந்தை மாயவனை தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கிவிட்டார் மதிவேந்தன்.

மாவட்ட பொறுப்புகள், தலைமைக் கழக பொறுப்புகளுக்கு மாத்திரமல்ல... கிளைக் கழகம் வரையிலும் இம்முறை வாரிசு அரசியல் அதிகப்படியான அளவில் அதிகாரங்களைக் கைப்பற்றி இருக்கிறது. வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதல்ல... தாராளமாக வரலாம். ஆனால், அப்படி வருபவர்கள் வாரிசுகளாக மட்டுமில்லாமல் கட்சிக்கு உழைத்தவர்களாகவும் இருந்தால் கழகத்துக்குள் ஏன் கலகம் வரப்போகிறது?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in