வேட்புமனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின் - தொண்டர்களுக்கு எழுதிய முக்கிய கடிதம்!

வேட்புமனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின் - தொண்டர்களுக்கு எழுதிய முக்கிய கடிதம்!

திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுகவின் 15 வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9 ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.

இதுகுறித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் , "கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும்,தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறேன். தி.மு.க  மாநிலக் கட்சியாக இருந்தாலும், உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், நம்முடைய திராவிட மாடல் ஆட்சித் திறனை, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏற்றுப் போற்றிப் பாராட்டுகின்றன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்திருக்கிறது. உடன்பிறப்புகள் உழைப்பில்  கழக ஆட்சியில் தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியையும் வலிமையையும் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத சில பிற்போக்கு சக்திகள், கழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, தங்களது கற்பனை எல்லையைக் காட்டும் வகையில் மட்ட ரகமான வேலையில் ஈடுபட்டு வருகின்றன. தி.மு.கழக உட்கட்சி தேர்தலில் ‘இருதரப்பிலும் கடும் மோதல்‘ , ‘ஆதரவாளர்கள் தாக்குதல்‘, ‘உள்கட்சி உள்குத்து - வெளிக்குத்து’ என்றுதான் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

கடைக்கோடி மனிதர்களுக்கும், கடைசிக் குக்கிராமத்திற்கும் அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்று சேர வேண்டும் என்கிற சிந்தையுடனும் முனைப்புடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது அரசு ஒவ்வொரு நொடியும் செயல்பட்டு வருகிறது. இதற்கு எப்படியாவது ஊறு விளைவித்திட வேண்டும் என நினைப்போரைச் சரியாக அடையாளம் கண்டு நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசிக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது.

கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் பொதுக்குழு அக்டோபர் 9 ம் நாள் ஞாயிறு அன்று கூடுகிறது. ஞாயிறு என்றாலே சூரியன்தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம். " எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in